உபியில் தொடரும் கைது படலம்.. முஸ்லிம்களை கட்டம்கட்டி தூக்கும் போலீஸ் - இன்று காலை வரை 357 பேர் கைது
லக்னோ: நபிகள் நாயகத்துக்கு எதிரான போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில் தொடர்புடையதாகக் கூறி இதுவரை 357 பேரை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்து இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
”இனி பாஜகவில் இருந்தால் நான் குற்றவாளி” நபிகள் நாயகம் மீதான அவதூறை கண்டித்து கவுன்சிலர் ராஜினாமா

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

உலகளவில் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது.

வீடுகள் இடிப்பு
இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ட்விட்டர் கணக்கில், புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்தநாள் சனிக்கிழமை வரும் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் அலகாபாத், சஹாரன்பூரில் போராட்டத்தில் இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.

போராட்டத்தில் வன்முறை
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

தொடரும் கைது படலம்
உபியில் இதுவரை 9 மாவட்டங்களில் மட்டும் 357 இஸ்லாமியர்களை கைது செய்த காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்து இருக்கிறது. இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக பிரயாக்ராஜில் 97 பேரும் சஹாரன்பூரில் 85 பேரும், ஹத்ரஸில் 55 பேரும், மொராதாபாத்தில் 40 பேரும், பெரோசாபாத்தில் 20 பேரும், அம்பேத்கர் நகரில் 41 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.