காங்.-க்கு வாக்களிப்பது வீண்.. உங்கள் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம்! காங்கிரஸை டார்கெட் செய்யும் மாயாவதி
லக்னோ: உ.பி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை அமைதியாக இருந்த மாயாவதி திடீரென இப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்,
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் பிப்.10இல் தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக உள்ளது.
ஆட்சிப் பணி விதிகளில் திருத்தமா? கட்டமைப்பே வலுவிழக்கும்- மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வார்னிங்

5 மாநில தேர்தல்
குறிப்பாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தைத் தருகிறது. பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. மேலும் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளதால் 2024க்கும் சேர்த்தே பாஜக திட்டமிடுகிறது. அதேநேரம் மறுபுறம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கடும் போட்டி அளிக்கிறது.

மாயாவதி
இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த உத்தரப் பிரதேச தேர்தலில் தனித்துக் களமிறங்குகிறது. 4 முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அவர் பெரியளவில் ஈடுபடாமலே இருந்து வருகிறார். இதனால் பகுஜன் சமாஜ் தொண்டர்கள் சற்று உற்சாகம் இழந்தே காணப்படுகின்றனர்.

அட்டாக்
இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பியே பாஜக இருப்பதாக நேரடியாக மாயவதி விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியையும் பிரியங்கா காந்தியையும் சாடியுள்ளார். உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வாக்குகளைப் பிரிக்க மட்டுமே முடியும் என்று தெரிவித்த அவர், உ.பி. மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்,

வீணாக்க வேண்டாம்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. பிரியங்கா காந்தி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்கிறார். இருப்பினும், சில மணி நேரத்தில் அதை அப்படியே மாற்றிப் பேசுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து தங்கள் வாக்கை வீணடிக்கக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் ஒரே முடிவாகப் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவைத் தரும்" என்று தெரிவித்தார்.

எதிர்காலம்
மேலும், அவர் தனது 2ஆவது ட்வீட்டில், "உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாக்குகளைப் பிரிக்க மட்டுமே பயன்படும் என்பது இங்குள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எந்தளவு இடங்களைப் பெறுகிறது என்பது அக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ஏனென்றால் கடந்த 2017 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி
முன்னதாக நேற்றைய தினம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், "மாயாவதியின் மவுனம் ஆச்சரியமளிக்கிறது. உத்தரப் பிரதேசத் தேர்தலில் இதுவரை மாயாவதி அமைதியாகவே உள்ளார். நான் உ.பி தேர்தலில் போட்டியிடுவேனா எனத் தெரியாது. ஆனால், உ.பி பொதுச்செயலாளர் என்ற முறையில் இங்கு நடைபெறும் தேர்தலுக்கு நான் தான் பொறுப்பு" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.