"ஒரு பாபர் மசூதியை இழந்தது போதும்.. இன்னொரு மசூதியை இழக்க விரும்பவில்லை!" கலங்கிய ஒவைசி.. என்னாச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதி ஒன்று, இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஒவைசி இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.
இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டு, அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர்.
இஸ்லாத்தில் இது மிக கொடூரமான குற்றம்... தலித் இளைஞர் படுகொலைக்கு அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம்

ஞானவாபி மசூதி
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீடியோ எடுக்க எதிர்ப்பு
இருப்பினும், மசூதிக்குள் வீடியோ எடுப்பதில் இரு தரப்பிற்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டதால் ஆய்வு முழுமையாக முடிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அனைத்து இடங்களிலும் வீடியோ எடுக்க நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தி, வரும் 17ஆம் தேதிக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை இஸ்லாமிய அமைப்பினரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்,

சட்டம்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் "அப்பட்டமான மீறல்" என்று மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி சாடி உள்ளார். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி, எந்தவொரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை அதே சமயப் பிரிவைச் சார்ந்தவர்கள் அல்லது வெவ்வேறு மதப் பிரிவினர் தங்கள் வழிபாட்டுத் தலமாக மாற்றக்கூடாது என்பதே அந்த விதியாகும்.

அப்பட்டமான விதிமீறல்
இது தொடர்பாக ஓவைசி மேலும் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறுவதாகும். இது பாபர் மசூதியின் உரிமைப் பிரச்சனையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாக உள்ளது. இது அப்பட்டமான விதிமீறல். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.

விரும்பவில்லை
நாங்கள் ஏற்கனவே ஒரு பாபர் மசூதியை இழந்துவிட்டோம். மற்றொரு மசூதியை இழக்க விரும்பவில்லை. இந்தியச் சுதந்திரம் அடைந்த போது, இருந்த மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்ற முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று 1991 சட்டம் தெளிவாகக் கூறுவதால் யோகி அரசு உடனடியாக இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.