ஷாக்..! ”4 நாட்கள் 4 பேர்” கொடுமையாக சீரழிக்கப்பட்ட சிறுமி! போலீஸ் ஸ்டேசனிலும் கைவைத்த இன்ஸ்பெக்டர்
லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, சிறுமியை விசாரணை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

உபியில் அதிர்ச்சி
இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நான்கு பேரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியை காவல் நிலைய அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் இருந்து தப்பிய 13 வயது சிறுமியை, உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள காவல் நிலையப் பொறுப்பாளர் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி பலாத்காரம்
நான்கு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் குற்றம் சாட்டினார் நிலையில், அதைத் தொடர்ந்து உறவினர் ஒருவருடன் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறியுள்ளார் அந்த சிறுமி.

அத்துமீறிய அதிகாரி
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து லலித்பூரில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், சரோஜ் தப்பியோடிவிட்டார் எனவும், மூன்று போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன என்றார். மேலும் முன்ந்தாக சிறுமியை கடத்தியதாக மேலும் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரி மீது வழக்கு
செவ்வாய்க்கிழமை சிறுமியின் தந்தை தாக்கல் செய்த புகாரில் நான்கு ஆண்களால் கடத்தப்பட்டு ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் நான்கு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவளை மீண்டும் அவளது கிராமத்திற்கு அழைத்து வந்து காவல் நிலைய வாசலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளர் சிறுமியை அவளது அத்தையிடம் ஒப்படைத்த நிலையில், வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மறுநாள் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அடுத்த நாள், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, சிறுமியை அவரது அத்தை முன்னிலையில் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸ் அதிகாரி சரோஜ் மீது பலத்காரம் மற்றும் போக்சோ (பாலியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.