அக்னி வீரர்களுக்கு ”பொண்ணு” கிடைக்காது.. பகீர் கிளப்பிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்
லக்னோ: அக்னிபாத் திட்டம் ராணுவத்தின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல் என்றும், அக்னிவீரர்களுக்கு பெண் கூட கிடைக்காது எனவும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிவீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி
இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

ஏன் இந்த அக்னிபாத்?
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

இளைஞர்கள் கொந்தளிப்பு
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேகாலயா ஆளுநர் பேச்சு
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் பேசிய மேகாலயா ஆளுநரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக், "அக்னிபாத் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கவுரவத்துக்கே எதிரானது. அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மதிப்பு குறைந்துவிடும்.

திருமணத்துக்கு பெண் கிடைக்காது
அக்னிபாத் திட்டம் மூலம் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியும் அக்னிவீரர்களை திருமணம் செய்துகொள்ள யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். 4 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்யும் வீரருக்கு யார்தான் பெண் கொடுப்பார்கள்? அரசு பழைய நடைமுறைகளின் படியே ராணுவ ஆள்சேர்ப்பை நடத்த வேண்டும்." என்றார்.