ஞானவாபி மசூதி விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற முஸ்லீம் அமைப்பினர்.. இன்று முக்கிய விசாரணை
லக்னோ: ஞானவாபி மசூதியில் வீடியோ உடன் கூடிய சர்வே எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பான முக்கிய வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்கிறது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அடுத்த சர்ச்சை! கிருஷ்ணா ஜென்மபூமிக்கு மிக அருகே உள்ள மசூதி.. மதுரா நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு
அதன்படி மூன்றாவது நாளாக நேற்றுடன் ஞானவாபி மசூதி ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கிய மசூதி வளாகத்தின் கணக்கெடுப்பு சுமார் 10:15 மணியளவில் நிறைவடைந்தது.
இதனிடையே ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது. அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில், மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் "சிவலிங்கம்" கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த குளத்திற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.