சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்!
லக்னோ: சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்டை தொடங்கி உத்தரப்பிரதேச இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரியின் நட்பு வட்டத்தில் கொலையாளிகள் இணைந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்ட கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினர். அக்குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
உ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்

காட்டி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்
முன்னதாக இக்கொலையில் தொடர்புடைய மூன்று நபர்கள் இரவோடு இரவாக குஜராத்தின் சூரத்தில் பிடிபட்டனர். கமலேஷ் திவாரியை சந்தித்த கொலையாளிகள் அவருக்கு இனிப்பு வழங்குவது போல் நடித்து கொலை செய்தனர். அந்த ஸ்வீட் பாக்ஸ் குஜராத்தின் சூரத்தில் பிரபலமான கடை ஒன்றில் வாங்கப்பட்டிருந்தது.

கொலையாளிகள் 4 பேர் கைது
இதனையடுத்து குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு உத்தரப்பிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அந்த ஸ்வீட் கடையின் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரத்த கறைபடிந்த உடைகள்
இந்நிலையில் கமலேஷ் திவாரியை கொலை செய்த 2 கொலையாளிகள் லக்னோவில் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரத்த கறைபடிந்த உடைகளை போலீசார் கைப்பற்றினர். தற்போது கொலையாளிகளை வலை வீசி போலீசார் தேடி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கொலையாளிகளில் ஒருவரான ஆஸ்ஃபக் என்பவர் சமூக வலைதளத்தில் ரோஹித் சோலங்கி என்ற பெயரில் போலி அக்கவுண்ட்டை தொடங்கி உள்ளார். அந்த அக்கவுண்ட் மூலம் கமலேஷ் திவாரியின் நட்பு வட்டத்தில் இணைந்து நெருக்கமாகி இருக்கிறார். இதனடிப்படையில்தான் கமலேஷ் திவாரிக்கு தீபாவளி இனிப்பு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கமலேஷ் திவாரியுடன் 30 நிமிட நேரம் கொலையாளிகள் இயல்பாக பேசிக் கொண்டிருந்த பின்னரே கொலையை செய்துள்ளனர் என்கின்றன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!