கிடுக்கிப்பிடி உத்தரவு.. தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்.. பிரசாரம் செய்ய வழியின்றி திணறும் "தலை"கள்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், 20-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர் புக்கிங்குகள் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது..!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் தேர்தல்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி காங். கமிட்டி தலைவர் பாஜகவில் இணைகிறார்

உத்தரபிரதேசம்
தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், ஜனவரி இறுதி வரை பேரணிகள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது... காரணம், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகி கொண்டே போகிறது.. இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களில் சுமார் 500 பேர் வரையில் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருந்தது.

பேரணிக்கு தடை
மேலும், அனைத்து கட்சிகளும் வரும் 22 ம் தேதி வரை பேரணி நடத்த தடை விதித்தது... ஆனால், பேரணி நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையை வரும் 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துவிட்டது.. இதனால் பிரச்சாரங்களை எப்படி நடத்துவது என்று தேர்தல் நடக்க போகும் 5 மாநில அரசியல் கட்சிகள் விழித்து கொண்டு வருகின்றன.. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபி தேர்தலை நாடே எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு தற்போது கை கொடுத்துள்ளது ஹெலிகாப்டர் பிரச்சாரங்கள்தானாம்..

வாடகை விமானங்கள்
தினம் தினம் நிறைய ஹெலிகாப்டர்கள் பிரச்சாரத்துக்காக புக் ஆவது என்பது வழக்கமான இயல்பு.. கடந்த காலங்களிலும் இதே ஹெலிகாப்டர் பிரச்சாரங்களை கட்சிகள் பயன்படுத்தி கொண்டன என்றாலும், இந்த முறை இதன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்று கணக்கு போடப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பிரச்சார தடை காரணமாக, முன்கூட்டியே, 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 10 வாடகை விமானங்களை அரசியல் கட்சிகளால் ஏற்கனவே அங்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்தனவாம்.. ஆனால், அவை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது...

பயன்பாடுகள்
MAAB ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் மந்தர் பார்டே என்பவர் இதைபற்றி சொல்லும்போது, "உபி தேர்தலுக்கு அரசியல்வாதிகள், 20 முதல் 30 கி.மீ தூரம் வரையிலான குறுகிய பயணங்களுக்கு கூட ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துகின்றனர்.. காரணம், ஹெலிகாப்டர்கள் மட்டுமே உள்ளூர் மக்களை கவர்ந்திழுக்கும் மிகச்சிறந்த பிரச்சார யுக்தியாகும்.. மேடை போட்டு பிரச்சாரம் செய்வதைவிட, 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த ஹெலிகாப்டர் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்படுகின்றனர்.

எக்கச்சக்க பணம்
அகஸ்டாவெஸ்ட்லேண்ட்-139 என்ற ஹெலிகாப்டர்தான் இப்போது கூடுதல் மவுசு பெற்று வருகிறது.. இதில், ஒரே நேரத்தில் 14 முதல் 16 பேர் செல்ல முடியும்.. ஆனால், அதே சமயம் விவிஐபி சுற்றுப்பயணத்தின்போது 6 பேர் மட்டுமே அதில் உட்கார முடியும்.. ஒரு மணி நேரத்திற்கு நான்கரை லட்சம் ரூபாய் இதற்காக வசூலிக்கப்படுகிறது... மேலும் சிங்கிள் எஞ்சின் ஹெலிகாப்டர், ஒரு மணி நேரத்திற்கு 1.3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது" என்கிறார்.

வரவேற்பு
ஆனால், ஹெலிகாப்டர் பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகளுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தக்கூடியதுதான் என்றாலும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றன.. காரணம், இதன்மூலம் எளிதாக நிறைய மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்று நம்புகிறது.. இத்தகைய பிரச்சாரங்களில், எந்த அளவுக்கு மக்களை தொடர்பு கொள்ள முடிகிறதோ, அந்த அளவுக்கு பலம் வாக்குகள் உயரும் என்று அரசியல் கட்சிகள் ஆழமாக நம்புகின்றன.. ஆனாலும், ஹெலிகாப்டர் பயன்பாடுகள் இந்த தேர்தலில் அதிகமாக இல்லை என்பதே யதார்த்த நிலைமை.. இதனால் கிராமப்பகுதி மக்களும் அத்தகைய ஹெலிகாப்டர் பிரச்சாரங்களை தற்போது காண முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.