ஒரு பக்கம் அகிலேஷ்.. மறுபக்கம் மாயாவதி.. இன்னொரு பக்கம் பிரியங்கா.. வெற்றிக்காக பாஜக பக்கா வியூகம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி 4 கோடி வீடுகளில் தாமரை சின்னத்தை ஒட்டும் மிகப் பெரிய திட்டத்தை பாஜக புதிய முயற்சியாக எடுத்துள்ளது. ஏற்கெனவே வீடுதோறும் பிரச்சார திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. இதையடுத்து பிப்ரவரி 14, 20, 23, 27, மார்ச் 3, 7 என தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. அது போல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க போராடுகின்றன.
அடடே... உ.பி. சட்டசபை தேர்தலில் யோகியை தொடர்ந்து முதல் முறையாக அகிலேஷ் யாதவ் போட்டியாமே?

மாநில கட்சி
இந்த நிலையில் பாஜகவுக்கு மாநில கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், தேசிய கட்சியான காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் மூன்று பக்கங்களிலிருந்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. தற்போது சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. அண்மையில் கருத்துக் கணிப்புகளில் கூட உ.பி மாநில தேர்தலில் பாஜக வெல்லும். இரண்டாவது இடம் சமாஜ்வாதி கட்சிக்கு என சொல்லப்பட்டது.

பொது கூட்டங்கள்
எனவே தற்போது பாஜகவின் முதல் கவனம் சமாஜ்வாதி மீது உள்ளது. இதனால் வெற்றியை பெற பாஜக கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது. தேர்தலில் நாயகன் என்றால் அது தேர்தல் அறிக்கை, அடுத்தது , பிரச்சாரம். இதில் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் பொதுக் கூட்டங்களை கூட்ட முடியாத நிலை உள்ளது.

பேரணி
மேலும் பாத யாத்திரை, பேரணி, பொது கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பாஜகவின் வெற்றியின் ரகசியமே மிகப் பெரிய பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள்தான். அதற்கு தடை ஏற்பட்டுள்ளதால் பாஜக புதிய முயற்சிகளை கையில் எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 12 கோடி வாக்காளர்களை நேரடியாக சென்று வாக்கு கேட்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தாமரை சின்னம்
அதன்படி பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தை 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒட்டுவதற்கு பாஜக புதிய முயற்சியை எடுத்துள்ளது. தற்போது வீடு வீடாக 10 பேர் வரை போய் வாக்கு சேகரிக்கலாம் என்பதால் வாக்குகளை சேகரித்துவிட்டு பாஜகவின் சின்னத்தையும் ஒட்டுவதற்கு கட்சியானது முழுவீச்சில் இறங்கியுள்ளது. குறிப்பாக குடிசை வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அது போல் பாஜகவின் மக்கள் நல திட்டங்களை எடுத்து கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது வெற்றியடைந்தால் நாமும் வெற்றி என கட்சி தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் மக்கள் முடிவு என்னாவாக இருக்குமோ!