உ.பி.யில் கொடுமை.. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு 50 லட்சம் கேட்டு நோட்டீஸ்
லக்னோ: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்ட உபி விவசாயிகளின் சங்க தலைவர்களுக்கு தலா ரூ .50 லட்சத்துக்கான தனிநபர் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சப் டிவிசனல் மாஜிஸ்த்ரேட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனிடையே இதை "ஒரு எழுத்தர் பிழை" என்று கூறிய போலீசார், 50 ஆயிரம் தான் என்று கூறினார்கள். ஆனால் விவசாய சங்க தலைவர்கள் இந்த அறிவிப்பை ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்று தெரிவித்துள்ளனர்.
சம்பாலில் உள்ள ஆறு தலைவர்களுக்கு தலா ரூ .50 லட்சத்திற்கான பாண்ட் தாக்கல செய்யுமாறு மாஜிஸ்த்ரேட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார், முக்கியமாக பாரதிய கிசான் யூனியனின் (அஸ்லி) நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. சிஆர்பிசியின் 111 வது பிரிவின் கீழ் தலா 50 லட்சத்திற்கான நோட்டீஸ் கடந்த டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன, இப்படி நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.
எம்ஜிஆர் புகழை உறிஞ்சி பிழைக்கலாம் என அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு - நமது அம்மா சாடல்

50 ஆயிரம் மட்டுமே
இதனிடையே சம்பல் மாவட்ட எஸ்பி சக்ரேஷ் மிஸ்ரா இதுபற்றி கூறுகையில் "நான் சப் டிவிசனல் மாஜிஸ்த்ரேட் உடன் பேசினேன், பிழையைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகள் வரும்" என்றார். , சம்பலின் வட்ட அலுவலர் அருண்குமார் சிங் கூறுகையில். மாஜிஸ்த்ரேட் தற்போது விடுப்பில் உள்ளார். மீண்டும் பணிக்கு திரும்பி வந்ததும் ரூ .50 ஆயிரம் பத்திரத்தை வழங்குவோம், ஏனெனில் முந்தைய நோட்டீஸ், எழுத்து பிழையுடன் வழங்கப்பட்டது" என்றார்.

பயங்கரவாதிகளா
50 ஆயிரத்திற்கான தனி நபர் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி நோட்டீஸ் அனுப்பியதற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.கே.யு (அஸ்லி) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் இதுபற்றி கூறுகையில், அகிம்சை போராட்டத்தை தடுக்க நினைக்கிறார்கள். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டு நிர்வாகம் ஏன் அஞ்சுகிறது? எங்களை பயங்கரவாதிகளாக கருதி ரூ .50 லட்சம் கேட்டு அவர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எங்களிடம் அப்படி பணம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும், " என்றார்.

காவல்துறை முயற்சி
சம்பலில் சிங்பூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 முதல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.. போராட்டத்தின் முதல் நாளில், சம்பலில் உள்ள ஒரு சௌக்கில் கிட்டத்தட்ட 400 பேர் கூடியிருந்தனர். அப்போதிருந்து, போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி போராட்டம்
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் " போராட்ட அறிவிப்புகளுக்கு முன்னர், எங்கள் நகர்வுகளை கண்காணிக்க காவல்துறை எங்கள் கிராமங்களை சுற்றி வந்தார்கள் நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் போதெல்லாம், எங்களை கைது செய்ய காவல்துறை எங்கள் வீடுகளுக்கு வரும். இதனால் நவம்பர் 28 அன்று தான் டெல்லிக்குச் செல்ல முடிந்தது. காவல்துறையினர் வருவதற்கு முன்பே நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். மறுநாள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க வயல்களில் தூங்கினோம் என்றார்கள்.

விவசாயிகள் வேதனை
விவசாய சங்க தலைவர்கள் கூற்றுப்படி, சில விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன, ஆனால் எந்த நிர்வாகமும் ரூ .50 லட்சம் கேட்டு அச்சுறுத்தியது இல்லை. இதை நீங்கள் கூட பட்டிருக்கமாட்டீர்கள். இங்குதான் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷின் ராஜ்வீர் சிங் வேதனை தெரிவித்தார்.