லக்னோவுக்கு பறந்த ஹெலிகாப்டர்! படாரென்று மோதிய பறவை! அவசரமாக தரையிறக்கம்! யோகியின் திக் திக் நொடிகள்
லக்னோ : உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பாஜக வரலாற்று சாதனையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கடந்த முறையை விட வெற்றி சதவீதம் குறைந்தது.
இதனையடுத்து பிரதமர் மோடி, கட்சியின் முக்கிய தலைவரான அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட விழாவில் யோகி ஆதித்யநாத் உபி முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
யோகி பக்கத்தில் சீட்! பணிவுத்திலகமாக ஓ.பன்னீர்செல்வம்! தம்பிதுரை மூலம் கெத்து காட்டிய எடப்பாடி!

யோகி ஆதித்யநாத்
முதல்வராக அவர் பதவியேற்ற பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார் மேலும் அவர் மேற்கொண்டு வரும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் பயணம்
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாரணாசி சென்று இருந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்தபின் காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவர் பின்னர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் வாரணாசியிலிருந்து லக்னோ நோக்கி தனது பிரத்தியேக ஹெலிகாப்டரில் யோகி ஆதித்யநாத் புறப்பட்டுச் சென்றார்.

பறவை மோதல்
யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று அதன் மீது வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சில வினாடிகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் சாதுரியமாக செயல்பட்ட விமானி ஹெலிகாப்டரை உடனடியாக வாரணாசியில் அவசரமாக தரையிறக்கினார்.

விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து விமானம் மூலமாக லக்னோவில் புறப்பட்டுச் சென்றார் ஆதித்யநாத். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மா அங்கு விரைந்தார். "லக்னோ புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டரில் பறவை மோதியது. இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து விசாரனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என சர்மா கூறியுள்ளார்.