குற்ற உணர்ச்சி இல்லை! ஆயிரம் முறை செல்வேன்! முஸ்லிம் பெண்களுக்கு பலாத்கார மிரட்டல்! சாமியார் சர்ச்சை
லக்னோ: சீத்தாபூர் பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் இஸ்லாமியர் துன்புறுத்தினால், முஸ்லிம் பெண்களை கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என பேசிய பகீர் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், அவ்வாறு தான் பேசியது குறித்து குற்ற உணர்ச்சி இல்லை என உபி சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கூறியது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் வலதுசாரி அமைப்பினரிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய கரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசி ஆசிரமத்தின் சாமியாரான பஜ்ரங் முனி தாஸ் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய பெண்களுக்கு பாலியல் மிரட்டல்! 11 நாட்களுக்கு பின்.. உ.பி சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது

பலாத்கார மிரட்டல்
ஜீப்பில் அமர்ந்தபடி ஒலிப்பெருக்கியில் பேசிய முனி தாஸ் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்தோடு வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை பேசினார்." தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகவும்,, இதற்காக ₹ 28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற அவர், சீத்தாபூர் பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் ஒரு இஸ்லாமியர் துன்புறுத்தினால், முஸ்லிம் பெண்களை கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று கூறினார்.

பெரும் சர்ச்சை
இந்த பேச்சினை அங்கிருந்த கூட்டத்தினர் பலத்த ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்ற நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்த உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர், வீடியோ ஏப்ரல் 2ஆம் தேதி அன்று படமாக்கப்பட்டது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகும் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் அளித்தார். அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த சீதாபூர் காவல்துறை, ஒரு மூத்த அதிகாரி இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சாமியார் கைது
மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்தே சீதாப்பூர் போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 13 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் நடந்த விசாரணையின் போது அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குற்ற உணர்ச்சி இல்லை
இந்நிலையில் முஸ்லீன் பெண்களுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்தது குறித்து எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை என சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாவட்டச் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பேசிய அவர், "நான் சொன்னதில் எனக்கு எந்தக் குற்றமும் இல்லை. விடுதலையான பிறகு, ஆயிரம் முறை சிறைக்குச் செல்லவும், பல தாக்குதல்களை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், ஆனால் தனது மதத்தையும் பெண்களையும் தொடர்ந்து பாதுகாப்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.