எதிர்கட்சிகளின் அமைதி ஏன்? வாரணாசி கியான்வாபி மசூதி குறித்து அசதுத்தீன் ஒவைசி கேள்வி
லக்னோ: வாரணாசி கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தும் விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் தற்போதைய மவுனத்துக்கு காரணம் என்ன? என எம்.பி. அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் தற்போது சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது.
கியான்வாபி மசூதிக்கு உரிமைகோரும் இந்துத்துவாவினர்... தொடங்கியது கள ஆய்வு! ஒரு கி.மீ போலீஸ் குவிப்பு

நீதிமன்றத்தில் வழக்கு
பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்து கிருஷ்ண ஜென்மபூமி என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் கியான்வாபி மசூதியை சுட்டிக்காட்டினர். மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

ஆய்வுக்குழு
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து குழு ஒன்றையும் அமைத்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.

தடை விதிக்க முடியாது
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். இதனை அடுத்து நேற்று மசூதியில் எதிர்ப்புகளை மீறி கள ஆய்வு தொடங்கி இருக்கிறது.

ஆய்வு தொடங்கியது
இந்த ஆய்வுக்குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் என 36 பேர் ஆய்வுக்காக கியான்வாபி மசூதிக்கு சென்றனர். அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் குவிக்கபட்டனர். இந்த ஆய்வை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிய கியான்வாபி மசூதியின் வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளதால் விரைவில் அது விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசதுத்தீன் ஒவைசி பேச்சு
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் ஒவைசி, "கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தும் விவகாரத்தில் எதிர் கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன. இஸ்லாமியர்கள் தங்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்ற அரசியலமைப்பு சாசனம் அனுமதி தருகிறது.

ஒரு பாபர் மசூதி போதும்
காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் தற்போதைய மவுனத்துக்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் அவர்களின் வாக்கு வங்கி இல்லை என்பதாலா? நாங்கள் ஒரு பாபர் மசூதியை இழந்துவிட்டோம். இன்னொன்றை இழக்க மாட்டோம் என்பதை தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன்." என்றார்.