பிளேட்டை திருப்பிய உபி போலீஸ்... சொமாட்டோ ஊழியர்தான் முதலில் தாக்கினாராம் - சாதி காரணம் இல்லையாம்
லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் தலித் என தெரிந்ததும் அவர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவான நிலையில், சொமாட்டோ ஊழியர்தான் முதலில் வாடிக்கையாளரை தாக்கியதாக லக்னோ காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள கிலா முஹம்மதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வினீத் குமார்.
தீண்டாமை.. ஜாதிய வன்மம்.. ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுப்பு.. முகத்தில் எச்சில் துப்பி கொடுமை
கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக பகுதி நேரமாக சொமாட்டோ நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் பணியையும் செய்து வருகிறார்.

சாதி வெறி
வினீத் குமாருக்கு கடந்த சனிக்கிழமை இரவு அஜய் சிங் என்ற வாடிக்கையாளரிடம் உணவு ஆர்டர் ஒன்று வந்துள்ளது. அவரும் உணவகத்தில் உணவை பெற்றுக்கொண்டு டெலிவரிக்காக அஜய் சிங் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினீத்தின் முழு பெயரை அஜர் குமார் கேட்டிருக்கிறார். "வினீத் குமார் ராவத்" என்று தனது பெயரை சொன்னவுடன் வாடிக்கையாளர் அஜய் சிங் சாதி பெயரை சொல்லி வினீத்தை திட்டி இருக்கிறார்.

கும்பல் தாக்குதல்
அத்துடன் தலித் தொட்ட உணவை தன்னால் வாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். அப்படியென்றால், ஆர்டரை கேன்சல் செய்யுமாறு வினீத் கூறவே, ஆத்திரமடைந்த அஜய் சிங், பான் மசாலாவை முகத்தில் துப்பி அவரை தாக்கி இருக்கிறார். அத்துடன் அவரது வீட்டில் இருந்த 12 பேரும் வெளியே வந்து தன்னை கட்டைகளால் கொடூரமாக தாக்கியதாக வினீத் குமார் புகாரளித்து இருக்கிறார். ஒருவழியாக அவர்களை சமாளித்து படுகாயங்களுடன் தப்பிய வினீத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

வழக்குப்பதிவு
அவரளித்த புகாரை தொடர்ந்து அஜய் சிங் மற்றும் அவருடன் இருந்த அபய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலைவெறித் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் ஆய்வாளர் தீபக் குமார் தெரிவித்து உள்ளார்.

வேறு காரணம் செல்லும் கமிஷ்னர்
இந்த நிலையில், அஜய் சிங் கீழே பான் மசாலாவை துப்பும்போது வினீத் குமார் மீது தெரியாமல் பட்டுவிட்டதாகவும் அதனால் வினீத் குமார்தான் முதலில் அஜய் சிங்கை தாக்கியதாகவும் லக்னோ காவல் ஆணையர் டி.கே.தாக்கூர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அஜய் சிங்கும் அவரது குடும்பத்தினரும் வினீத் குமாரை தாக்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். வழக்கு விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என அவர் கூறியுள்ளார்.