“ஒருபக்கம் ஆளுங்கட்சி.. மறுபக்கம் அவங்க.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவை”- கமிஷனிடம் மனு!
மதுரை : தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியை நடத்துவேன் எனப் பேசியதற்காக, ஆளுங்கட்சியினரால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என மதுரை ஆதீனம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை ஆதீனத்திற்கும், ஆதீன மடத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்ககோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், பல்வேறு தரப்பினரால் மதுரை ஆதீனத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரண்டு வந்த திகவினர்.. அட பல்லக்கே வேண்டாம்.. அன்று நடந்தே சென்ற ஆதீனம்.. இப்போ மட்டும் என்னாச்சு?

பல்லக்கு தூக்க தடை
தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு, மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின் பேரில், தடை விதிக்கப்பட்டது.
இதற்கு, இந்து அமைப்பினர், ஆன்மீகவாதிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை எனத் தெரிவித்திருந்தார்.

நானே சுமப்பேன்
மதுரை ஆதீனம், "தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணம். உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்.
பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்." எனக் கூறினார்.

மதுரை ஆதீனம்
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் உன்னால் திருப்பணி செய்ய முடியுமா என என்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதேபோல அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவேன். மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்களா, அது வெள்ளைக்காரனால் கூட முடியவில்லை." என்றார்.

கமிஷனரிடம் மனு
இந்நிலையில், மதுரை ஆதீனத்திற்கும், ஆதீன மடத்திற்கும் பாதுகாப்பு வழங்ககோரி அவரது வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சோலைக்கண்ணன் ஆகியோர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
அவர்களது மனுவில், தருமபுர ஆதீனத்திற்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பேசினார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வருகிறது. ஆதீனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் சொத்துக்கள் திருப்புறம்பியம் போன்ற பகுதிகளில் உள்ளது.
கடைகள் மற்றும் குத்தகை பாக்கியை மதுரை ஆதீனம் வசூல் செய்து வருகிறார். சில குத்தகைதாரர்கள் வாடகையை தர காலம் தாழ்த்தி வருவதோடு மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்
இதுபோன்ற பிரச்சனைகளால் மதுரை ஆதீனத்தின் மடத்தை தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சோலைக்கண்ணன் ஆகியோர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.