தமிழகத்தில் கொரோனா கொடுமை.. மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு மரணம்!
மதுரை: காங்கிரஸ், தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு கொரோனா தொற்று பாதித்து மதுரையில் காலமானார், அவருக்கு வயது 60. ராம்பாபு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1960 ஆம் ஆண்டு பிறந்த ராம்பாபு காங்கிரஸ் கட்சியை பின்புலமாக கொண்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஏஜி சுப்புராமன் காங்கிரஸ் சார்பில் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். குறிப்பாக 1984ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து ராம்பாபு 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார் . அதன்பிறகு ராம்பாபு தேர்தலில் போட்டியிடவில்லை.
உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம் - திருக்கல்யாணம், தேரோட்டம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ராம்பாபு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராம்பாபுவின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.