பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர், வைகை பாலத்திற்கு தேவர் பெயர்! அரசுக்கு பாஜக கடிதம்
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மீனாட்சி அம்மன் பேருந்து நிலையம் என அழைக்க உத்தரவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், வைகை ஆற்றுப் பாலத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட பாஜக தலைவருமான டாக்டர் சரவணன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்... காங் டஃப் ஃபைட் கொடுக்கும்: Republic TV சர்வே

பாஜக கடிதம்
''மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் எங்கு சென்றாலும் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்தும் தருவதும், பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளும், தமிழ் செம்மொழி ஆராய்ச்சிக்கு கட்டிடமும், வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரில் இரயிலும் தந்து தமிழகத்தை பெருமைபடுத்தியுள்ளார்.''

பாஜக வரவேற்கிறது
''மத்தியில் குடியரசு விழாவின் நடைமுறைகளை அறியாத குழப்பத்தால் தமிழக ஊர்திகள் இடம்பெறவில்லை என அரசியல் நடக்கிறது. எங்கள் மாநிலத்தலைவர் அவர்கள் உரிய விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் குடியரசு தினவிழா நிகழ்வில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊர்தி கலந்து கொள்ளும் என தாங்கள் அறிவித்ததை வரவேற்கிறோம்.''

ஸ்மார்ட் சிட்டி
''மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் சில பாலங்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிலையிலும் சில பாலங்கள் வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்களுக்கு விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பெயர்களைச் சூட்டினால் அது தமிழக அளவிலும், தேசிய அளவிலும் தமிழகத்தின் மரியாதையை உயர்த்திக்காட்டும்.''

வைகை பாலம்
''வைகையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் வெள்ளைக்காரரான ஆல்பர்ட் விக்டர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை இருப்பதால் அதற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பாலம் எனப் பெயர் சூட்டலாம். இந்த இடத்தில் அவரை கைது செய்த வரலாற்றை மக்களுக்கு நினைவூட்டும்.''

பெயர் சூட்டலாம்
''குருவிக்காரன் சாலைப் பாலத்திற்கு விடுதலை வேங்கைகள் மருதுபாண்டியர்கள் பெயரைச் சூட்டலாம். காளவாசலில் உள்ள பாலத்தை கல்வித்தந்தை மூக்கையாத்தேவர் பாலம் என அழைக்கலாம். மதுரை நத்தம் சாலையில் அமைக்கப்படும் நீண்ட பாலத்திற்கு வீரன் அழகு முத்துக்கோன் பெயர் சூட்டலாம்.''

மீனாட்சி அம்மன்
''மதுரைக்கு அருளாட்சி வழங்கும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மதுரை மீனாட்சி அம்மன் பேருந்து நிலையம் என அழைக்க உத்திரவிடலாம். மதுரை மக்கள் விருப்பமும் அதுவே. பொதுமக்களின் விருப்பத்தை வழிமொழியும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.''