சிபிஐ கேஸ்களில் பெரும்பாலும் தண்டனை கிடைப்பதில்லை.. நம்பகத்தன்மை போய் விடாதா.. உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: சிபிஐ விசாரிக்கும் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய விகிதாச்சாரம் ரொம்பவே குறைவாக இருக்கிறது.. இது சிபிஐ மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்ததாகவும், இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர் என்றும், இதையடுத்து பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், ஓராண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் நீதிமணி உள்ளிட்டோர் மீது ராமநாதபுரம் போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

சிபிஐக்கு மாற்ற வழக்கு
இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் சரியாக விசாரணை நடத்தவில்லை, எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

ஹைகோர்ட் கிளை
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு சமீபத்தில் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.

நீதிபதிகள் சரமாரி கேள்வி
சிபிஐ தரப்பில் வாதிடும்போது தங்களிடம் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை தங்களுக்கு மாற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட குறுக்கிட்ட நீதிபதிகள், சிபிஐ அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? கடந்த 20 ஆண்டுகளில் சிபிஐக்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது? இதில் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது? சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்கப்பட்டது? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நம்பகத்தன்மை
மேலும், சிபிஐ விசாரிக்க கூடிய வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் விடுதலையாக எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. ஆதாரத்தை சிபிஐ சமர்ப்பிக்க முடியாததுதான் விடுதலை எண்ணிக்கை அதிகரிக்க காரணம். இது சிபிஐ போன்ற உயர் விசாரணை அமைப்பு மீதான நம்பகத்தன்மையை குறித்து விடாதா? என்று கேள்வி எழுப்பினர். நாட்டையே உலுக்கிய பல்வேறு வழக்குகளை அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டு இதில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவில்லை என்பதை குறிப்பிட்டனர்.