துணை மேயர் பற்றி மேயரிடம் புகார்! குறை தீர்க்கும் முகாமில் நடந்த டிவிஸ்ட்! மதுரை மாநகராட்சி கூத்து!
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் துணை மேயர் மீது மேயரிடம் ஒருவர் புகார் கூறியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை துணை மேயர் நாகராஜன் மீது புகார் கூறி முத்துவேல் என்பவர் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பார்த்த மதுரை மேயர் இந்திராணி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி நிர்வாகம் துணை மேயர் மீதான புகாரால் இப்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு என்ன பிரச்சினை?.. அரசுக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 97-வது வார்டை சேர்ந்த முத்துவேல் என்பவர் துணை மேயர் நாகராஜன் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். நிலவரையறை விவகாரத்தில் தன்னை துணை மேயர் நாகராஜன் மிரட்டுவதாக மேயர் இந்திராணியிடம் முறையிட்டார். தன் மீதான புகாரை மேயரிடம் முத்துவேல் தெரிவித்த போது துணை மேயர் நாகராஜனும் அருகில் அமர்ந்து இருந்தது தான் இதில் சிறப்பு.

விவாதம் வேண்டாம்
இதனிடையே மேயரிடமும், அதிகாரிகளிடமும் துணை மேயர் நாகராஜன் ஏதோ கூற, பதிலுக்கு முத்துவேல் என்பவரும் அவரை நோக்கி ஏதோ கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே ''அண்ணே சும்மா விவாதம் பண்ணாதீங்க'' எனக் கூறி தனது தரப்பு நியாயத்தை மேயரிடம் மீண்டும் விளக்கிக் கூறினார் முத்துவேல். அப்போது துணை மேயர் இடைமறிக்க முயன்ற போது, மதுரை மாநகராட்சி ஆணையர் அவரை அமைதிப்படுத்தினார்.

விசாரிங்க மேடம்
நமக்கேன் வம்பு என்கிற வகையில் அங்கிருந்த அதிகாரியை அழைத்த மதுரை மேயர் இந்திராணி, முத்துவேல் கேட்கும் கோரிக்கை நியாயமானதா அதை செய்து கொடுக்க சாத்தியம் உள்ளதா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினார். அப்போதும் துணை மேயர் ஏதோ கூற, பதிலுக்கு முத்துவேல் ''உங்களுக்கு ஏண்ணே கோபம் வருது'' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

முக்கிய மாநகராட்சி
தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக திகழக்கூடிய மதுரையில் துணை மேயர் மீதே மேயரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஆட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் சென்றிருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி நிர்வாகம் துணை மேயர் மீதான புகாரால் இப்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.