ஜல்லிக்கட்டு நடத்தி முடித்த கையோடு.. அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா! வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை
மதுரை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று லேசான நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் அவர் நலம்பெறுவார் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

வணிகவரித்துறை
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முதல் லேசான உடல்வலி மற்றும் காய்ச்சலுடன் இருந்த அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி.

முதல்வர் விழா
இதனிடையே மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில் அமைச்சர் மூர்த்தி கொரோனா பெருந்தொற்று காரணமாக பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மூர்த்தியுடன் கடந்த 2 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா சோதனை செய்துகொள்ள முன் வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு விழா
பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களில் முழுமையாக பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, வீரர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக அள்ளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு அஞ்சாமல் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தது முதல் அது மாலை நிறைவடையும் வரை அமைச்சர் மூர்த்தி அனைவருடனும் மேடையிலேயே இருந்தது கவனிக்கத்தக்கது.

4-வது அமைச்சர்
இதனிடையே தமிழக அமைச்சர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் மதிவேந்தன், எஸ்.எஸ்.சிவசங்கர், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றுள்ள நிலையில், 4-வது அமைச்சராக மூர்த்தி கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அமைச்சர் மூர்த்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.