நீட் தேர்வு: டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி.. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு நல்ல செய்தி.. அமைச்சர்
மதுரை: தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப் பணித் துறை , நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரை வந்தார். அவர் விவசாய கல்லூரி அருகே தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எ.வ.வேலு மதுரை நத்தம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
எம்பிபிஎஸ் படிப்புக்கு நாங்க கேரண்டி... சத்தமில்லாமல் சாதனை செய்யும் மெட்டா நீட் அகாடமி

மதுரை
அப்போது அவர் கூறுகையில், மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடந்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கலைஞர் நூலக கட்டடப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அங்கு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி மேற்பார்வையில் கட்டட வேலை நடந்து வருகிறது.

90 சதவீதம்
இது ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும். தற்போது 90 சதவீதம் கட்டட பணி முடிந்துள்ளது. அடுத்தபடியாக கட்டடங்களின் உள் அலங்கார வேலைகள் நடக்கவுள்ளது. கலைஞர் நூலகம் என்பதால் பணிகள் விரைந்து நடப்பதாக கூறுவது உண்மை இல்லை. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

நீட் தேர்வு விலக்கு
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு சம்மந்தமாக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றியது. இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி, டெல்லி செல்கிறார். எனவே தமிழக அரசின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம்.

நீட் தேர்வு என்னாகும்
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து டாக்டர் ஆகலாம் என்றார் எ.வ.வேலு. பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட்டே மருத்துவ சேர்க்கை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.