தஞ்சை மாணவி தற்கொலை.. வீடியோ எடுத்தவருக்கு சிக்கல்.. டிஎஸ்பி ஆபீசில் ஆஜராக கோர்ட் உத்தரவு!
மதுரை: தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவரை ஆஜராக உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட் நீதிபதி, இந்த வழக்கில் வேறு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அரியலூர் வடுகர் பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் +2 படித்து வந்தார்.
சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி
பள்ளிக்கு அருகே இருந்த விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, கடந்த ஜன. 9ஆம் தேதி தொடர்ந்து மாணவியைப் பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவி உயிரிழப்பு
அப்போது மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அப்போது தான் அந்த மாணவி, பூச்சி மருந்தைச் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர், உடனடியாக அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 15இல் சேர்த்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19இல் உயிரிழந்தார். இந்தச் சூழலில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மதமாறும்படி பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும் அதற்குத் தான் ஒத்துக் கொள்ளாததால் தன்னிடம் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது.

சிபிசிஐடி விசாரணை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மதமாற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாணவியின் பெற்றோரும் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

37 பேர்
இந்தச் சம்பவத்தில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளரிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் உட்பட 37 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ எடுத்த நபர்
அனைத்து வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்ற நபரை நாளை காலை 10 மணிக்கு வல்லம் கேம்ப் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். இருப்பினும், வீடியோ எடுத்த முத்துவேல் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை என்று தந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உண்மைதன்மை
மேலும், மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், வீடியோவின் உண்மைத்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வீடியோ எடுத்த செல்போனை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். செல்போன், மாணவியின் வீடியோ பதிவு உள்ள சிடியை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் அலுவலகத்திற்கு நாளையே வழங்கவும் விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.