இந்துக்கள் ‘நாகூர்’ தர்கா, ‘வேளாங்கண்ணி’ சர்ச் செல்வதில்லையா? - கேஸ் போட்டவருக்கு டோஸ் விட்ட ஐகோர்ட்
மதுரை: கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிற மதத்தினர் கலந்துகொள்ள தடை விதிக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, "இந்து கோயில்களில் உள்ள தேரின் வடம் பிடித்து இழுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால் இந்து மதத்தை நம்பாதவர்கள், இந்து ஆலயங்களுக்கு செல்லாதவர்கள், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கவும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கவும் கூடாது. இதை ஏற்க முடியாது. மாற்று மதத்தினர் இந்து கோயில்களின் விழாக்களில் தலைமையேற்பதை ஏற்க முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் எம்எல்ஏ காந்தி பேசியிருந்தார்.
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக “பர்கர், சாண்ட்விச்” தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு

எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் "யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத் துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர்.காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

ரூ.50 கோடியில் திட்டம்
1996-ம் ஆண்டில் இருந்தே பல கோவில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன். குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் கோவில்களில் ₹50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

கோயில் கும்பாபிஷேகம்
இதற்கிடையே வரும் ஜூலை 6 ஆம் தேதி திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து குமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றம் கருத்து
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, "இந்து அறநிலையத்துறையின் விதிகளில் கோயில் கும்பாபிஷேகங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறப்படவில்லை. 120 கோடி பேர் உள்ள இந்தியாவில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கும் செல்கையில் அவர்களின் மதத்தை உறுதி செய்வது பிரச்சனையை ஏற்படும்.

அதிரடி உத்தரவு
கிறிஸ்தவரான யேசுதாஸ் பல இந்து கடவுள் பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கின்றனவே. வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும் நாகூர் தர்காவுக்கும் இந்துக்கள் சென்று வழிபடுகின்றார்கள். எனவே இதனை குறுகிய பார்வையில் அணுகாமல் பரந்த மனதோடு அணுக வேண்டும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்." என்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.