கட்லா.. கெளுத்தி.. விரால் என வகைவகையாக.. கண்மாயில் துள்ளிக் குதித்த மீன்கள்! வலையை வீசிய மக்கள்!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் மக்கள் வீசிய வலைகளில் கட்லா, ரோகு, கெளுத்தி, விரால் என வகைவகையான மீன்கள் சிக்கின.
வலையில் சிக்கிய மீன்களை கொண்டு குழம்பு சமைத்து அதனை சாமிக்கு படைத்த பின்னர் உண்பதை மேலவளவு சுற்று வட்டார மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி மக்கள் மீன்பிடித்தக் காட்சி காண்பதற்கே கண்கொள்ளா வண்ணம் இருந்தது.
சொன்னதை செஞ்சுட்டாரே... விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மதுரை ஆதீனம்

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு கிராமத்தில் கருப்பு கோவிலுக்கு சொந்தமான பரம்பு கண்மாய் உள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் மும்மாரி மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம் .

மீன் பிடித்திருவிழா
அந்த வகையில் மேலவளவு சோமகிரி மழை அடிவாரத்தில் உள்ள பரம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதனிடையே முன்னதாகவே மீன்பிடி திருவிழா பற்றி மேலவளவு கிராமம் சார்பில் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

வகை வகையாக
அதனடிப்படையில் மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலைகளுடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் சிறிய மற்றும் பெரிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
கட்லா , ரோகு , விரால் கெளுத்தி , ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன் குழம்பு
பிடிபட்ட மீன்களை அவரவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று குழம்பு வைத்து சாமிக்கு படைத்து பின் குடும்பத்துடன் உட்கொள்வதை இந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வைகாசி மாதத்தில் இது போன்ற மீன் பிடித் திருவிழா அங்கு நடைபெறுவது வழக்கம்.