ஆர்ப்பரித்து சீறிய வீரத்தமிழச்சி அன்னலட்சுமி காளை! ஏர்கூலர் -நாற்காலி-தங்ககாசு என குவிந்த பரிசுகள்!
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 15 வயது இளம்பெண் அன்னலட்சுமியின் காளை ஆர்ப்பரித்து சீறி பாய்ந்ததை அடுத்து அவருக்கு ஏர்கூலர் நாற்காலி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விழாக்கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்டன.
ஒரு பெண்ணாக இருந்தும் அதுவும் இந்த இளம் வயதில் இவ்வளவு துணிச்சலாக ஜல்லிக்கட்டு மைதானத்தில் இறங்கி வீரர்களுக்கு சவால்விடும் வகையில் நின்ற அன்னலட்சுமியை அழைத்து அமைச்சர் மூர்த்தி பாராட்டி தங்ககாசை பரிசாக வழங்கினார்.
அன்னலட்சுமிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டியினர் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியை சூட்டி அதனை ஓபன் மைக்கில் அறிவித்தனர்.
இதை மாத்தலாமே! வீக் எண்டில் இறைச்சி கடைகளில் அள்ளும் கூட்டம்! தமிழ்நாடு அரசு சொன்ன முக்கிய அறிவுரை

பாலமேடு ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 300 வீரர்கள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முடிஞ்சா புடிச்சுப் பார் என ஒவ்வொரு காளையும் வாடிவாசலில் சீறிப் பாய்ந்த நிலையில் அதனை அடக்கி ஆள காளையர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். வெறும் பரிசுகளுக்கு அப்பாற்பட்டு வீரத்தை நிலைநாட்டும் விவகாரமாக இதனை அவர்கள் பார்த்தனர்.

அன்னலட்சுமி காளை
இந்நிலையில் அன்னலட்சுமி என்ற இளம்பெண்ணின் காளை நண்பகல் வாக்கில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. காளையின் உரிமையாளரான அவர், தில் இருந்த என் மாட்டை தொட்டுப்பாருங்க என சவால் விடும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் இறங்கி தனது துப்பட்டாவை சுழற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இளம்பெண்ணின் துணிச்சலை கண்ட ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் அன்னலட்சுமிக்கு வீரத்தமிழச்சி என பட்டம் சூட்டினர்.

அமைச்சர் பாராட்டு
மேலும், அமைச்சர் மூர்த்தி அந்தப் பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனிடையே வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப் பட்டது தான் தாமதம், அன்னலட்சுமியின் காளை அடங்கமறுத்தி சீறிப்பாய்ந்து ஓடியது. இதையடுத்து காளை பிடிபடவில்லை என அறிவித்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், காளையின் உரிமையாளரான அன்னலட்சுமியை அழைத்து ஏர்கூலர், நாற்காலி, அமைச்சர் வழங்கிய தங்கக்காசு என பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர்.

முதல் பரிசு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3-வது ஆண்டாக பொதும்பு என்ற ஊரை சேர்ந்த பிரபாகரன் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய டட்சன் கார் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனிடையே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பாலமேடு ஜல்லிக்கட்டு திடலை விட்டு அமைச்சர் மூர்த்தி நகரவே இல்லை. முழுமையாக அங்கேயே இருந்து விழாவை சச்சரவின்றி நடத்தி முடித்தார்.