அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறி பாயும் காளைகள்... அடக்க குவிந்த காளையர்கள்..!
மதுரை: பொங்கல் திருநாளையொட்டி வழக்கமான உற்சாகத்துடன் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது கவனமும் மதுரை மாவட்டத்தின் பக்கம் திரும்புவது இயல்பு. காரணம் அங்கு 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்திபெற்றவை.

ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது மற்ற இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டை விட தனித்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் உறுதிமொழி வாசித்து ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகனும் அமைச்சர் செல்லூர் ராஜூவும் காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தனர்.
தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
முதலில் ஊர் மரியாதை காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அந்தக் காளையை எந்த வீரர்களும் அடக்கக் கூடாது என்றும் தொட்டுக் கும்பிட்டுக் கொள்ளுமாறும் விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்தக் காளையை தொட்டுக் கும்பிட்டு அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர்.
இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டி சிறந்த மாடு வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என விழா மேடையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.