கூட்டணியில் குழப்பம்! தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றணும்! மார்க்சிஸ்ட் கம்யூ. தடாலடி!
மதுரை: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரிமைக் குரல் எழுப்பியிருப்பது கூட்டணிக்குள் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் ராணிபேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் மக்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன் என பெருமிதம் தெரிவித்து பேசுகிறார்.
அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?
மற்றொருபுறம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட இன்னும் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என குரல் எழுப்புகிறார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பொதுவெளியில் பேசியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை விளைவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பரப்புரை நிகழ்த்தி வரும் சமயத்தில், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதை உண்மையாக்குவது போல் பேசியிருப்பது தான் திமுகவினருக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவது, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது என இன்னும் பல வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அவற்றையெல்லாம் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தார். இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஒரு பக்கம் எடுத்து வரும் நிலையில் பாலகிருஷ்ணனின் பேட்டி திமுகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அரசியல்
எதிர்க்கட்சிகள் தான் அரசியலுக்காக இது போன்று பேசுகிறது என்றால் நீங்களுமா என கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பார்த்து திமுக தலைமை மிகவும் நொந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்கிதோடு அந்த இரண்டு இடங்களிலும் அக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்ததும் திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக -பாஜக
இதனிடையே கூட்டணிக் கட்சித் தலைவரே திமுக அரசை பார்த்து என்ன கூறுகிறார் எனப் பாருங்கள் என்று அதிமுகவும் பாஜகவும் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு காட்சிகளை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.