கார்த்திகை பிறந்தது - மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப முருக பக்தர்கள்
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. முருகனுக்கு அரோகரா என்ற சரண கோஷங்கள் எதிரொலித்தன.

கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடி அணிந்து செல்பவர்கள். இன்று கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
திருப்பூர், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஐயப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் ஏராளமான பக்தர்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து இருமுடி செலுத்த முடிவு செய்துள்ளனர்.