மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் பதவியேற்பு - ரகசிய அறையின் சாவி ஒப்படைப்பு
மதுரை: மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரி நாதர் முக்கியடைந்ததை முன்னிட்டு 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் ஆதின மடத்தின் சொத்துக்கள் அடங்கிய ரகசிய அறையின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் மதுரை ஆதீனம் மிக முக்கியமான ஒன்று. 1500 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்த மதுரை ஆதீனத்தை, திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். தற்போது இந்த மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக சீர்காழி வட்டாரத்தைச் சேர்ந்த அருணகிரிநாதர் 27.5.1975ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 291வது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் மரணமடைந்த பிறகு, 14.3.1980ஆம் ஆண்டில் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் மதுரை ஆதீனம் 292 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசார்ய சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.
1980ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 31 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர், சைவ நெறி பரப்புதலுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பல நல்ல விஷயங்களைச் செய்துவந்திருக்கிறார். சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.
அருணகிரிநாதருக்கு கடந்த 8ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் சனிக்கிழமைன்று மதுரை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அருணகிரிநாதர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைய சன்னிதானமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தாவை நியமித்தார். இதில் சில சர்ச்சைகள் ஏற்பட்டதால் பின்னர் அவரை நீக்கினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
அருணகிரி நாதர் உடல்நலம் பாதிக்கப்பட்ட உடன் 293வது ஆதினமாக தன்னை அறிவித்துக்கொண்டார் நித்யானந்தா. தனது முகநூல் பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து சொத்துக்கள், நகைகள், பத்திரங்கள் அடங்கிய அறை சீல் வைக்கப்பட்டது.
அடுத்த 9 வருடங்களில் உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்- ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு
கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவர் இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மதுரை ஆதினம் முக்தியடைந்ததை முன்னிட்டு ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து மதுரை ஆதீன மடத்தின் நிர்வாக பொறுப்பினை 293வது மடாதிபதியான ஹரிஹரர் தேசிகர் ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆதின மடத்தின் சொத்துக்கள் அடங்கிய ரகசிய அறையின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை ஆதீன மடத்துக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்துக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துகள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி இருக்கும் என, பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மடத்திற்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. தற்போது நகைக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது.
ஆதீன மடத்துக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் நிலம் அவனியாபுரத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலம் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. இது தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.