கவனிக்க யாருமில்லையா? மருத்துவமனையில் போராடும் வ.உ.சி கொள்ளுப்பேத்தி.. 30 நிமிடத்தில் உதவிய மா.சு!
மதுரை: மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதவி செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் குடியரசுத் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது. பெரியார், வேலுநாச்சியார், வ.உ. சிதம்பரனார் ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்திகள் நேற்று சென்னை குடியரசுத் தின விழாவில் மக்கள் முன் காட்சிபடுத்தப்பட்டது.
டெல்லி அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்திகள் மறுக்கப்பட்ட நிலையில் அந்த ஊர்திகள் சென்னையில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. இந்த அலங்கார ஊர்திகளில் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் சிலையும் ஒரு வாகனத்தில் இடம்பெற்று இருந்தது.
உத்தரகாண்ட் தேர்தல்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி காங். கமிட்டி தலைவர் பாஜகவில் இணைகிறார்

வ.உ. சிதம்பரனார்
இந்த அலங்கார ஊர்தியின் புகைப்படங்கள் இணையம் முழுக்க நேற்று வைரலானது. வ.உ. சிதம்பரனாரின் இந்த புகைப்படங்கள் வைரலான் அதே நேரத்தில் அவர் தொடர்பான இன்னொரு செய்தியும் இணையத்தில் பரவிக்கொண்டு இருந்தது. அவரின் கொள்ளுப்பேத்தி பற்றிய செய்தி அது. வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தற்போது மதுரையில் வசித்து வருகிறார். பல்வேறு சமூக சேவை ரீதியான பணிகளை இவர் செய்து வருகிறார்.

வ.உ. சிதம்பரனார் கொள்ளு பேத்தி
45 வயதாகும் இவர் கடந்த சில வாரங்களாக உடல்நிலை குறைவாக மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மோசமான நிலையில் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இவரை உடன் இருந்து பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் மருத்துவமனையில் இவர் தனியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இதை பற்றிய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சுதந்திர போராட்டத்தில் செக்கிழுத்தவர் வ.உ. சிதம்பரனார். ஆனால் அவரின் குடும்பத்தை பார்க்க யாரும் இல்லை. மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெறும் அவலம்தான் தற்போது உள்ளது. அவருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அரசுக்கு கோரிக்கை
நெட்டிசன்கள் பலர் வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி புகைப்படத்தை பகிர்ந்து அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்தனர். இந்த நிலையில் இந்த புகைப்படங்களில் வெளியான 30 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி சிகிச்சை அளிக்கப்படி உத்தரவிட்டார். மதுரை அரசு மருத்துவமனை முதல்வரை போனில் தொடர்பு கொண்டு, வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும், அவருக்கு முறையான கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பேஸ்புக் போஸ்ட்
இது தொடர்பாக பேஸ்புக்கிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் வெளியிட்டு, வ.உ. சி கொள்ளுபேத்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதையடுத்து தற்போது வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி மருத்துவ குழு ஒன்று சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. துரிதமாக செயல்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.