காதை கிழித்த விசில் சத்தம்! காலையிலேயே.. ஸ்பெஷல் ஷோவில் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்த்த அமைச்சர் மூர்த்தி!
மதுரை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அமைச்சர் மூர்த்தி ஸ்பெஷல் ஷோ மூலம் தியேட்டரில் கண்டுகளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களும், திமுக இளைஞரணி நிர்வாகிகளும் நிமிடத்துக்கு நிமிடம் விசில் அடித்தும் கரகோஷம் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
ரசிகர்களோடு ரசிகராக காதை கிழித்த விசில் சத்தத்திற்கு மத்தியில் சத்தமேயின்றி நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்துவிட்டுச் சென்றுள்ளார் அமைச்சர் மூர்த்தி.
நெஞ்சுக்கு நீதி ரிலீஸ்! உதயநிதியை வியக்க வைத்த

நெஞ்சுக்கு நீதி
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து திமுக இளைஞரணி
நிர்வாகிகளும், உதயநிதி ரசிகர் மன்றத்தினரும் இதனை திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித், படங்கள் வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் எந்தளவுக்கு கொண்டாடுவார்களோ அதை விட ஒரு படி மேலாகவே கொண்டாடி வருகின்றனர்.

மொத்தமாக புக்கிங்
தமிழகத்தின் பல இடங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் முதல் நாள் காட்சிகளை அவரவர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் மொத்தமாக புக்கிங் செய்து
கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இலவச டிக்கெட் வழங்கி வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி
இதனிடையே மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் காம்ப்ளக்ஸ் திரையரங்கில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
அமைச்சர் மூர்த்தி ஸ்பெஷல் ஷோவுக்கு சென்றிருந்தார். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டருக்கு சென்ற அவர், ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து அவர்கள் அடித்த காதை கிழிக்கும் விசில் சத்தத்திற்கு மத்தியில் சத்தமேயின்றி படம் பார்த்துவிட்டுச் சென்றார்.

முதல் வேலை
நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க வந்த அனைவருக்கும் உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் இடைவேளையின் போது இலவசமாக கோன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் பதவிக்குரிய பொறுப்பான பணிகளை விட்டுவிட்டு காலையில் முதல் வேலையாக சினிமா பார்க்கச் செல்வதா என மதுரை மாவட்ட பாஜகவினரும், அதிமுகவினர் அமைச்சர் மூர்த்தியை விமர்சிக்கின்றனர்.