மதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே.. ஊறு வரும்னு தெரிந்தும் ஊருக்கு உழைத்தவரே வருக.. போஸ்டரில் அதகளம்
மதுரை: "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே அமைச்சர் செல்லூர் ராஜு" என அவரது ஆதரவாளர்கள் செம்மையான வரவேற்பு போஸ்டர்களை அடித்து கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்கும் விதமாக, ஒட்டிய போஸ்டர்கள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தடுப்பு முன்கள வீரர்கள் மத்தியிலும், தொற்றானாது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழக அமைச்சர்களான மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் ராஜூ ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அது போல் அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் ஜெ அன்பழகன் எம்எல்ஏ உயிரிழந்தார்.

செல்லூர் ராஜூ
இந்த நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் நோயின் தாக்கத்திற்கு ஏற்ப அவர்கள் குணமடைந்து ஒவ்வொருவராக மருத்துவமனையால் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தர்மம்
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த செல்லூர் ராஜூ, முழுவதுமாக குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினார். இந்நிலையில் இதனை வரவேற்கும் விதமாக மதுரையில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் "ஊறு வரும் என்றாலும் ஊருக்கு உழைத்தவர், அவர் செய்த தர்மம் கொரோனாவிலிருந்து அவரை மீட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டது, உலகம் உள்ளவரை அந்த தர்மத்தை தொடருவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையை மீட்டவர்
அது போல் செல்லூர் ராஜூவை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனே என்றும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு சென்னையை போல் பரவி வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களுக்கு போஸ்டர் அடித்துள்ளது, மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கவனம்
இந்தப் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரைக்கும் போஸ்டருக்குமான நெருக்கம் ஒன்று புதிதல்ல. மதுரை என்றாலே நினைவுக்கு வருபவர் முக அழகிரி, இவரது ஆதரவாளர்கள் வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள். அவை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.