• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கீழடியில் கிடைத்த எடை கற்கள், கிண்ணிமங்களம் தமிழ்எழுத்து கல்தூண்... சு.வெங்கடேசன் எம்பி பெருமிதம்

|

மதுரை: மதுரை கீழடியில் கிடைத்த எடை கற்கள், கிண்ணிமங்களத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்து கல்தூண் ஆகியவை பெருமிதத்துக்குரியவை என்று லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

  தமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்

  இது தொடர்பாக சு. வெங்கடேசன் எழுதி இருப்பதாவது:

  மதுரைக்குக் கிழக்கே சுமார் இருபது கிலோமீட்டரில் கீழடியும் மேற்கே இருபதுகிலோமீட்டரில் கிண்ணிமங்களமும் இருக்கின்றன. இந்த வாரத்தில் இவ்விரண்டு இடங்களிலுமிருந்தும் வந்துள்ள செய்திகள் தமிழக வரலாற்றுக்கு மிகமுக்கியமானவை.

  MP Su Venkatesan on Tamil Brahmi inscription near Madurai

  காவல்கோட்டம் நாவலுக்கான ஆய்வுக்காக அலைந்துதிரிந்த போதுதான் முதன்முறையாக கிண்ணிமங்கலம் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். தமுஎசவின் செக்காணூரணிக் கிளையில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர்கள் அருளானந்தமும் சிவமணியும் அழைத்துப்போனார்கள். அங்குள்ள ஏகநாதர் பள்ளிப்படைக்கோயில் சிற்பங்கள் மிக அழகானவை. சின்னஞ்சிறு கிராமத்துக்கு நடுவில் வடிவான கட்டிக்கலை. நான் தேடிப்போனதோ, குற்றப்பழங்குடியினர் சட்டம் பற்றிய ஆவணங்களை. ரேகைச்சட்டப் பதிவேடுகள் ஒன்றிரண்டு கிடைத்ததாக நினைவு.

  நான் போவதற்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிலிருந்து மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் அங்கு வந்துள்ளார். தாது வருஷ பஞ்சத்தைப்பற்றிய முழுக்கதைப்பாடலைப் பாடிய ஒரு மூதாட்டியைக் கண்டு, அந்த முழுப்பாடலையும் பதிவுசெய்து போனதாக மக்கள் சொன்னார்கள். அந்த மூதாட்டி சொல்லும் கதைகள்பற்றி எண்ணற்ற கதைகளை அந்த ஊர்மக்கள் சொன்னார்கள். "அந்த மூதாட்டி இப்பொழுது அவ்வூரில் இல்லை, வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து போய்விட்டார்" என்றும் சொன்னார்கள். எப்படியாவது அந்த மூதாட்டியைக் கண்டறிந்துவிட வேண்டும் என்று அதற்குப்பின் இரண்டு, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்தேன். முடியாமலே போய்விட்டது. அந்த ஜப்பானிய ஆய்வாளரையும் கண்டறிய முடியவில்லை.

  MP Su Venkatesan on Tamil Brahmi inscription near Madurai

  அருளானந்தத்தின் குடும்பம் பாரம்பரியமாக மருத்துவம்(பண்டுதம்) பார்த்த குடும்பம். அருளானந்தத்தின் தந்தைக்கு அப்போதே எண்பது வயதிருக்கும். அவரிடம் மருத்துவம் சார்ந்த ஏட்டுச்சுவடிகள் எண்ணற்றவை இருந்தன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏடுகளை ஒரே இடத்தில் முதன்முதலில் கண்டது அங்குதான்.

  பள்ளிப்படைக் கோயிலின் வரலாற்றைச் சார்ந்து அவர் சொன்ன கதைகள். மிகவும் ஈர்த்தன. ஆனால் மருத்துவம் சார்ந்து அவர் சொன்ன செய்திகளின்பால் நான் அதிகம் கவனங்கொள்ளவில்லை. காரணம் எனது ஈடுபாடு முழுவதும் ரேகைச்சட்டம் பற்றிய ஆய்வில் குவிந்திருந்தது. கவனச்சிதறல் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

  கிண்ணம், கிண்ணி என்பது மருத்துவத்துக்கான முக்கியமான பொருள். சமண, பெளத்த மரபுகளில் வேர்பாய்ச்சியுள்ள ஒன்றெனச்சொல்லலாம். இங்கு கண்ட மருத்துவ ஏட்டினையும் ஊரின் பெயரையும் இணைத்து யோசித்ததுண்டு. ஆனால் அதனை நோக்கி எண்ணங்களை விரித்துச் செல்லவில்லை. எனது கவனம் ரேகைச்சட்டம் பற்றியதாக இருந்ததால் அவ்வழியிலே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தேன். மூதாட்டியின் தாது வருஷத்துக் கதையைக் கேட்க அவ்வழியில் இழுபட்டுப் போய்விட்டேன். அந்த மூதாட்டி அதற்கு முந்தைய நூற்றாண்டுக் கதைகளை ஒன்றுவிடாமல் சொல்வாள் என்று பலரும் சொன்னார்கள். அவளைக் காணமுடியாமல் போனது பேரிழப்பு என்று இன்றுவரை உணர்கிறேன்.

  பத்தாண்டுகளுக்குப் பின் எனது அடுத்த நாவலுக்காக கிண்ணிமங்கலத்தில் அருளானந்தத்தின் தந்தையிடமிருந்த மருத்துவ ஏட்டுச்சுவடிகளைத் தேடிப்போனேன். மதுரையின் மருத்துவமரபு எண்ணற்ற வேர்களை நிலமெங்கும் பாய்ச்சிக்கிடப்பதைக் கண்டு மலைத்துக்கிடந்தேன். ஏகநாதர் பள்ளிப்படைக்கோயில் சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லிகளின் சிற்பங்கள் மிக அழகானவை. ஏறக்குறைய எனது நினைவும் அங்கு ஒட்டியே இருந்துள்ளது.

  MP Su Venkatesan on Tamil Brahmi inscription near Madurai

  ஓராண்டுக்கு முன் அங்கு புதிய கட்டிடத்துக்காக நிலத்தை தோண்டியபோது பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. உடனே அருளானந்தம் மற்ற தோழர்களிடம் சொல்லி என்னை தொடர்புகொள்ள முயற்சித்தார். அப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததால் உடனே அங்கு போகமுடியவில்லை.

  இப்பொழுது, ஊரடங்குக் காலத்தில் மிகநல்லதொரு செய்தி அங்கிருந்து வந்துள்ளது. ஏகநாதர் பள்ளிப்படைக் கோயில் வளாகத்தில் தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர் நமது ஆய்வாளர்கள்.

  கோயில் வளாகத்தில் 2 ½ × 1 ½ அடி அளவுள்ள கல்தூண் ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் "ஏகன் ஆதன் கோட்டம்" என எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு காலம் சுமார் கிமு ஆறிலிருந்து கிமு இரண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுதல் அகழாய்வு செய்யும்போது இதனை முழுமையாகக் கண்டறிய முடியும்.

  அடுத்தபடியாக சுமார் 11 × 11 அங்குல அளவில் உள்ள கல்லில், "இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்" என வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இது சுமார் 8ஆம் - 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. எழுத்துகள் மிக நுண்ணிய வரிவடிவமாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கள ஆய்வினை ஆய்வாளர்கள் காந்திராஜன், இராசவேல், ஆனந்தன் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.

  இந்தியாவிலே பிராமி கல்வெட்டுகள் குவியலாக மிக அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் இடம் மதுரை. மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சிறுகுன்றுகளிலும் இக்கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இப்பொழுது புதிதாய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

  எழுத்துகளின் தாய்நிலம் தனது சான்றுகளை மீண்டும் மீண்டும் நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது. இக்கொரோனா காலத்திலும் ஆய்வுப்பணிகளை முன்னெடுத்துச் செய்யும் ஆய்வாளர் மூவருக்கும் எனது வாழ்த்துகள்.

  புதிதாகக் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டில் இருக்கும் ஆதன் என்ற பெயரும் கோட்டம் என்ற பெயரும் ஓர் எழுத்தாளனாகிய எனக்கு மிகமுக்கியமானவை. மிக உற்சாகமூட்டக்கூடியவை.

  மதுரையின் காவல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எனது முதல் நாவலுக்கு எத்தனையோ பெயர்களை யோசித்தேன். நாவலின் விரிவையும் அடர்த்தியையும் தாங்கும் பெயராக அவற்றுள் எதுவும் இல்லை. "கோட்டம்" என்ற சொல் மட்டுமே அதற்கான வலிமையோடு இருந்தது. எனவே காவல்கோட்டம் எனப் பெயரிட்டேன்.

  இப்பொழுதோ 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டில் "கோட்டம்" என்ற சொல் கிடைத்துள்ளது. மதுரையின் வேரில் இருந்து கிளைத்த சொல்லொன்றே நாவலின் தலைப்பாக அமைந்தது. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கமுடியும்?

  இரண்டாம் நாவலான வேள்பாரியில் முதல் பக்கத்தில் வரும் முதல் கதாபாத்திரத்தின் பெயர் ஆதன். ஆதன் விரைந்து செலுத்தும் தேரின் வழியேதான் வேள்பாரியின் வாசிப்புப் பயணம் தொடங்கும்.

  கிண்ணிமங்களம் பள்ளிப்படை வளாகத்திலிருந்தே சொல்லெடுத்துத் தந்துள்ளது காலம்.

  @

  கீழடியின் ஆறாம்கட்ட அகழாய்வு மிகவிரிந்த அளவில் இவ்வாண்டு நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி எழுத நிறைய செய்திகள் உண்டு. ஆனால் அதற்கான காலம் இதுவன்று என்பதால் எழுதுவதை தவிர்த்து வருகிறேன். ஆனாலும், கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ள எடைக்கற்கள் பற்றி முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல்கட்டுமானத் தொடர்ச்சி இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. அந்த அகழாய்வுக் குழியிலும் அதனைச் சுற்றியுள்ள குழிகளிலும் பல்வேறு அளவுகளில் கருங்கல்லாலான நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளது. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150, 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பும் இக்குழிகளில் கிடைக்கப்பெற்றுள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியனவும் தொழில்கூடமாக செயல்பட்டுள்ளதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியின் வணிகச்செழிப்பினை உறுதிசெய்ய முடிகிறது.

  இவை வணிகத்தை எடைபோடும் கற்களாக மட்டுமல்லாமல் வரலாற்றினை எடைபோடும் கற்களாகவும் இருக்கின்றன. ஏனென்றால் இந்தக் காலம் அப்படி.

  கரோனா தொற்றின் பேரிடர் காலத்தில், மன அழுத்ததில் இருக்கும் மதுரைக்கு இச்செய்தி ஆறுதலையும் ஆசுவாசத்தையும் கொடுக்கும்.

  #கீழடி #கிண்ணிமங்களம்

  #maduraiMPwrites #CoronaUpdatesinIndia

   
   
   
  English summary
  Loksabha MP Su Venkatesan on Tamil Brahmi inscription near Madurai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X