ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் நேசிக்கிறேன்.. பேசுங்க.. சேர்ந்து ஏதாவது செய்யுங்கள்.. சீமான் அட்வைஸ்!
மதுரை: அதிமுக கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
மதுரை அவனியாபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் புதிதாக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றினார். தொடர்ந்து அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக அதிகார யுத்தம்:புரட்சி பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா- தடுக்குமா ஈபிஎஸ் கோஷ்டி?

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தாயாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. இந்த செயல் வரம்பு மீறிய சேட்டை. எங்களைப் போன்றவர்களிடம் அதிகாரம் இருந்தால் இதுபோன்ற சேட்டைகளை அவர்கள் செய்ய மாட்டார்கள். இதேபோல் தேசிய கீதமான ஜனகனமன பாடல் ஒலிக்கும் போது அமர்ந்திருந்தால் என்ன செய்வீர்கள். அவர்களுக்கு அவர்களின் தாய் பெரிது. எனக்கு என் தாய் பெரிது. அதனால் மரியாதையாக நடந்து கொள்வதே நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு
தொடர்ந்து அதிமுக கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைகளை இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நான் இருவரையும் மதிக்கக்கூடியவன். அவர்களை நேசிக்கிறேன். இருவரும் ஒன்றாக இருந்து ஏதாவது பண்ணுங்கள். ஒரு சிறு தவறு இவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். யார் பக்கம் நிற்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
பாஜக எப்போதும் பெரிய நாடகத்தை நடத்தும். குஜராத் கலவரத்தால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு சரிவை சந்தித்தது. அப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் ஒருசிலர் சேர்ந்து தான் அப்துல் கலாமை வாஜ்பாயிடம் அறிமுகம் செய்துவைத்து குடியரசுத் தலைவராக ஆக்கினார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை முன் நிறுத்தும் பாஜக அரசு, எத்தனை பழங்குடி மக்களை அமைச்சராக நியமித்திருக்கிறது. சகோதரத்துவம் சமத்துவத்தைப் பற்றி பேசும் பாஜக, நாடகத்தை நடத்தி வருகிறது என்று விமர்சித்தார்.

அக்னிபாத் திட்டம்
தொடர்ந்து அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆட்களை எடுக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் வெளிப்படையாக பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக இராணுவம் என்ற போர்வையில் பயிற்சி அளித்து மக்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டுகிறது.
உண்மையில் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், 4 ஆண்டுகளுக்கு மட்டும் வேலை வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.