சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது திமுக அரசு! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை: சட்டம் ஒழுங்கை முறையாக திமுக அரசு பராமரிக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியமைக்காக திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக கூறியிருக்கிறார்.
சிசிடிவி.. ரெட்டி.. மெட்ரோ! ஓ பன்னீர்செல்வம் பற்ற வைத்த 8 வெடிகள்.. ஜெ மரண விசாரணையில் நடப்பது என்ன?

ஓ.பி.எஸ்.பேட்டி
சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை செய்தியாளர்கள் சூழந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் பேட்டி கொடுக்க விரும்பாத ஓ.பி.எஸ். அங்கிருந்து தனது காரை நோக்கி விறுவிறுவென நடையை கட்டினார். ஆனாலும் பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியதால், ஒரு நிமிடம் மட்டும் நின்று திமுக அரசு பற்றி பேசி விட்டுச் சென்றார்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும் குற்றச்செயல்களை குறைக்க நடவடிக்கை எடுக்காததற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேற்கொண்டு சசிகலா பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவாகும் என்பதால் வேகமாக அங்கிருந்து புறப்படுவதில் மட்டுமே குறியாக இருந்தார் ஓ.பி.எஸ்.

ஆறுமுகசாமி ஆணையம்
சசிகலா மட்டுமல்லாமல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானது பற்றியும் விசாரணை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிவிடுவார்களோ என்ற ஐயமும், படபடப்பும் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்ததை காண முடிந்தது. அண்மையில் சசிகலா மீது தனிப்பட்ட ரீதியில் மரியாதை வைத்திருப்பதாக ஓ.பி.எஸ். அளித்த பேட்டி அவருக்கு கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் சிறிது நாட்களுக்கு பேட்டிகளை அவர் தவிர்க்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சி
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வம் சட்டம் ஒழுங்கு பற்றி குற்றஞ்சாட்டியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஓ.பி.எஸ். புகாருக்கு தமிழக அரசுத் தரப்பில் மூத்த அமைச்சர்கள் யாரேனும் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.