**** பாத்துக்கலாம்! போஸ்டரால் போலீசில் சிக்கிய மநீம நிர்வாகிகள்! மாஸ் காட்ட நினைத்து பீஸான பரிதாபம்!
மதுரை : நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை போஸ்டராக ஒட்டிய மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அதிக இடங்களில் பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கும் கமல் முன்பு நடித்த விக்ரம் படத்தின் பெயரை தான் வைத்திருக்கின்றனர்.
பிளேட் என்றாலே.. பக்கிரிதானா? நீங்க இப்படி எழுதலாமா கமல் சார்? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்!

விக்ரம் கமல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான 2 நிமிடம் 39 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கமல் ஹாசன், ஃபஹத், விஜய் சேதுபதி மூவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக "இந்த காட்ல அஸ்தமனத்தை பாக்கப்போறது யாருனு முடிவு பண்றது இயற்கை இல்ல நான் தான்" என வசனங்களில் மாஸ் காட்டியுள்ளனர் கமல்ஹாசனும்,லோகேஷ் கனகராஜும்.

ட்ரைலரல் சர்ச்சை
படத்தில் கமல் பேசும் மற்றொரு வசமான, "இந்த நேரத்துல வீரங்கல்லா என்ன சொல்லுவாங்க தெரியுமா" .... பாத்துக்கலாம் என ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர் இருந்தாலும் இந்த விவகாரம் அத்தோடு முடிந்து போனது. ஆனால் அதிரடி ட்ரெய்லரால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தனர். படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

மதுரையில் போஸ்டர்
இந்த நிலையில் அதில் இடம்பெற்றுள்ள வசனத்தை மைய்யப்படுத்தி "சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! *____* பாத்துக்கலாம்..!" என்ற வசனத்தோடு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

போலீசார் வழக்குப் பதிவு
தொடர்ந்து அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் போலீசாரால் அகற்றப்பட்டது.