ராகுலும்... உதயநிதியும்... ஒரே மேடையில்... அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்..!
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.
ராகுல்காந்தி விழா மேடைக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அவனியாபுரம் வந்தடைந்தார் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக மதுரை வில்லாபுரத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அவர் கலந்துகொண்டார்.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரமும், தங்க காசுகளும் உதயநிதி ஸ்டாலின் பெயரை கூறி வழங்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட தங்க மோதிரங்கள் மற்றும் தங்க காசுகளை மூர்த்தி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்து வீரர்களுக்கு அணிவிக்கக் கூறினார்.
ராகுல்காந்தி மேடைக்கு வந்த பிறகு அவரது எதிர் மேடையில் நின்றிருந்த உதயநிதி ஸ்டாலினை ராகுல்காந்தியுடன் வந்து அமருமாறு விழா கமிட்டி சார்பில் மைக்கில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த மூர்த்தி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, உள்ளிட்டோர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த மேடையை நோக்கி சென்றனர்.
ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!
ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்படும் என போலீஸ் கறார் காட்டியதை தொடர்ந்து அவருடன் சென்ற மற்றவர்கள் கீழேயே நின்று கொண்டனர். மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி மட்டும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்து மேடையேறினார்.
உதயநிதி ஸ்டாலினை பார்த்தவுடன் எழுந்துநின்று வரவேற்ற ராகுல்காந்தி, ஸ்டாலின் பற்றி கேட்டறிந்தார். பிறகு, இருவரும் அவ்வப்போது உரையாடிக்கொண்டனர். இதனிடையே காளை ஒன்று ராகுல் அமர்ந்திருந்த மேடை அருகே வந்ததை அடுத்து, அவர் ஆர்வமுடன் அதை எழுந்து நின்று பார்த்தார்.
சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட ராகுல் இது தனக்கு ஒரு அழகான அனுபவம் என்றும் தமிழக மக்களுக்கு என்றும் தாம் துணை நிற்பேன் எனவும் தெரிவித்தார்.