பன்னீர் இப்போ கண்ணீர் செல்வம்.. சுயநலவாதி ஓபிஎஸ்.. இப்படி செய்யலாமா? போட்டுத்தாக்கிய ராஜன் செல்லப்பா
மதுரை : பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Recommended Video - Watch Now
அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், திமுகவை எதிர்க்கும் சக்தி எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
டிடிவியுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்? தூதாக பறந்த வைத்தி! ஜூலை 11 நினைத்தது நடக்குமா? ஏக்கத்தில் இபிஎஸ்!

அதிமுகவில் சூடுபிடித்த மோதல்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் எனக் கூறி வருகின்றனர். ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸூக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொள்ளும் என்பதால், அந்த பொதுக்குழுவை நடத்த விடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் தரப்பு தீர்க்கமாக உள்ளது.

தலைமை கழக நிர்வாகிகள்
இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்பில் நடந்தது. தனது கையெழுத்து இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜன் செல்லப்பா
இந்நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் வி.வி.ராஜன் செல்லப்பா இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். வரும் 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். ஓ.பி.எஸ் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

சுயநலத்தோடு செயல்பட்ட ஓபிஎஸ்
தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஓ.பி.எஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி உள்ளார். ஓ.பி.எஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரிக்கவில்லை. ஆனால், தனது சுயநலம் கருதி நேற்று ஒபிஎஸ் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

விலகிச் செல்ல வேண்டும்
ஒ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ் தவிர்த்து இருக்கலாம். ஒபிஎஸ்-க்கு எதிராக எந்த சதி வலையும் பின்னப்படவில்லை. அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். பன்னீர் செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது அனுதாபம் தேடி கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார்.

தென் மாவட்டங்களில்
அதிமுக சுதந்திரமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் பதவிகளை யாரும் அங்கீகரிக்க தேவையில்லை. பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஓ.பி.எஸ் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் தலைவர் இல்லை, அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர்.

திறமை இல்லாதவர்
தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அதிமுகவை நிர்வாகம் செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு திறமை இல்லை. தொண்டர்களை ஒருங்கிணைக்கும் தகுதியும் திறமையும் இல்லாதவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் பொதுச் செயலாளர்.

அவலம்
திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள், துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்கக்கூடாது. ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்தது அவலம். சட்டமன்றத்தில் பேசலாம், ஆனால், மனு கொடுத்தது ஏற்புடையது அல்ல. அதிமுகவில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை செய்ய தயாராக இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.