சங்க கால மதுரையை நவீனகால மதுரையாக உருவாக்கியது திமுக அரசு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மதுரை : மிகப் பழமையான சங்ககால நகரமாக இருந்த மதுரையை தற்போதிருக்கும் நவீனகால மதுரையாக உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
5 வயது குழந்தைகள் இனி மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.. மத்திய சுகாதாரத்துறை மிக முக்கிய அறிவுரை!
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீதி கேட்டு கண்ணகி முழங்கிய இந்த மதுரை மண்ணில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மண்ணில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்கிய இந்த மண்ணில் எனக்கு அரசியல் பயிற்சிக் களமாக அமர்ந்த இளைஞரணி தொடங்கப்பட்ட மதுரையில் இன்று நடக்கும் விழாவில் காணொளி வாயிலாக பங்கெடுப்பது நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

சங்க கால மதுரை
சங்க கால நகரமாக மதுரை இருந்தாலும் நாம் பார்க்கும் நவீன மதுரையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், நகராட்சியாக இருந்த மதுரையை 1971-இல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி மேம்படுத்திய அரசு, நம்முடைய தி.மு.க. அரசு தான் எனவும், மாவட்ட நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் எனவும், அதை திறந்து வைத்தவர் முதலமைச்சராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எனக் கூறினார்.

கலைஞர் கருணாநிதி
சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் அமைய வேண்டும் என்று முதன்முதலாக 1973-ஆம் ஆண்டு முயற்சித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். 1989-ஆம் ஆண்டும் முயற்சித்தார். 1996-ஆம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தார் எனவும், அதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார், அதுவும் கழக ஆட்சியில்தான், 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது என பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு, அதற்கு 'மதுரை முத்து மேம்பாலம்' என்ற பெயர் சூட்டியவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் எனப் பேசினார்

திமுகவின் சாதனைகள்
ஆண்டாள்புரம் பாலத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டியவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் எனவும், மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம்பாலம் கட்டப்பட்டு, 'தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன் மேம்பாலம்' என்று பெயர் சூட்டப்பட்டது, மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை அமைக்கப்பட்டது, தமிழைச் செம்மொழி என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவிய பரிதிமாற்கலைஞருக்கு மணிமண்டபம் கட்டியது, திராவிட மொழிநூல் ஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணருக்கு மணிமண்டபம் ஆகியவை அமைத்த அரசும் கழக அரசு தான் என பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், மதுரா கோட்ஸ் மேம்பாலம், ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே 3 தரை பாலங்கள், வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், செல்லூர் அருகே தத்தநேரி இருப்புப்பாதை, உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை கழக ஆட்சியில் தான் அமைக்கப்பட்டன என்றார்.

முதல்வர் உறுதி
தொடர்ந்து திமுக ஆட்சிக காலத்தில் மதுரைக்குச் செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் எனப் பேசிய முதல்வர், இத்தகைய சாதனைச் சரித்திரத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறோம் எனவும், சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம் அமையப் போகிறது, அதுவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் அமையப் போகிறது என்றார். காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக கலைஞர் நினைவு நூலகம் அமையப் போகிறது. அதுவும் மதுரை மண்ணில் அமையப் போகிறது என்பது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமையாகும் என்அவும், மதுரையானது மாமதுரையாக - அழகான மதுரையாக - எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றிக் காட்டப்படும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் உறுதி அளிக்கிறேன் என முதலமைச்சர் உரையாற்றினார்.