மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டைக் காலரில் கமகமக்கும் குட்டிகுரா பவுடர்.. கையில் குச்சி.. "அட்வெர்ப்"னா என்ன சொல்லு!

Google Oneindia Tamil News

மதுரை: அவரைப் பார்த்தால் ஆங்கில வாத்தியார்னே சொல்ல முடியாது. அப்படி ஒரு டிப்பிக்கல் தோற்றம். வழக்கமாக ஆங்கில வாத்தியார்கள் எப்படி இருப்பாங்க.. எப்படிப் பேசுவாங்க.. அதில் ஒரு இலக்கணத்தைக் கூட பரமசிவம் வாத்தியாரிடம் பார்க்க முடியாது.

பரமசிவம் வாத்தியார்... இவர் உண்மையில் எங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ.. ஹீரோன்னதும் ரஜினி, கமல் ரேஞ்சுக்கு நினைக்கக் கூடாது.. அவர்களை விட சூப்பரான ஹீரோ இவர். வெள்ளைச் சட்டை, வேட்டிதான் காஸ்ட்யூம்.. கழுத்துக் காலரில் அந்தக் காலத்து வழக்கப்படி கர்ச்சீப் இருக்கும்.. குட்டி குரா பவுடர் மணக்கும். கையில் குச்சி இருக்கும். அது ஒரு மாநகராட்சி ஸ்கூல். படிச்சவன் பூராம் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். என்னைப் போல வாத்தியார் மகன்கள் சிலரும் கூட அதில் அடக்கம்.

The unforgettable teachers and the students of those days

வாயைத் திறந்தாலே தமிழ்தான் அருவி மாதிரி பொழியும்.. ஆனால் இவர் ஆங்கில வாத்தியார்.. ஆச்சரியமா இருக்கும் எங்களுக்கு இவர் பேசப் பேச.

10ம் வகுப்புக்கு இவர்தான் ஆங்கில வாத்தியார்.. இவரைப் பற்றி 9ம் வகுப்பிலேயே நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஜாலியா நடத்துவார்.. ஆனால் அடிக்க ஆரம்பிச்சா இடி மாதிரி இருக்கும்னு.. ஆஹா.. எப்படி கரையேறப் போறோமோன்னு கொஞ்சம் கெதக்குன்னுதான் இருந்தது. காரணம், ஆங்கிலம் நமக்கு கொஞ்சம் தகராறு என்பதால். இருந்தாலும், நாமளும் வாத்தியார் மகன்தானே.. அடி வாங்காம எப்படியாவது தப்பிக்க வழி கிடைக்கும் என்ற சின்ன நம்பிக்கையில் பத்தாவதுக்கு காலடி எடுத்து வச்சேன்.

ஆனா பாருங்க விதி வலியது.. முதல் நாளிலேயே முதல் வகுப்பிலேயே கிராமரைக் கையில் எடுத்து விட்டார் பரமசிவம் வாத்தியார். நமக்குத்தான் திக்கும் தெரியாது திசையும் தெரியாதே.. முதல் நாளே என்னாகப் போகுதோ என்ற பீதி.. திரும்பிப் பார்த்தா, கிளாஸில் இருந்த 40 பேரும் இதே மாதிரிதான் முழி பிதுங்கிப் போய் உட்கார்ந்திருக்கானுக!

The unforgettable teachers and the students of those days

கடவுளுக்கே நாங்க கலங்கிப் போயிருப்பது தெரிஞ்சிருக்கும்.. "பரமசிவத்துக்கு" மட்டும் தெரியாமலா போயிருக்கும்.. அவர் கண்டுக்காமல் புத்தகத்தைப் பிரிக்க ஆரம்பித்தார். வாசித்துக் கொண்டே வந்தவர். திடீரென நிறுத்தி கையில் குச்சியை எடுத்து குத்துமதிப்பாக ஒரு திசையைக் காட்டி "எந்திரி.. அட்வெர்ப்னா என்ன சொல்லு" என்று கேட்டார்.. அந்தப் பையனை மொத்த கிளாஸும் திகிலுடன் பார்க்க.. நானும் அந்தப் பையனைப் பார்க்கிறேன்.. ஆனால் எல்லோரும் என்னைப் பார்ப்பது போலவே இருக்கு.. அடடா.. வாத்தியார் காட்டிய குச்சி.. "நம்மை" நோக்கித்தான் இருக்கு என்று அப்பத்தான் புரிகிறது.. அதாவது என்னைத்தான் கேட்டிருக்கிறார் வாத்தியார்.

நமக்கு அட்வெர்ப் கருப்பா சிவப்பான்னு கூட தெரியாதே.. என்னத்தைச் சொல்றது என்று வெள்ளந்தியாக எழுந்து நின்று அமைதியாக அவரையேப் பார்த்தேன்.. என்னைப் பார்த்த வேகத்திலேயே என்னோட "ரேஞ்சை" தெரிந்து கொண்டு விட்டார் வாத்தியார்.. "அட்வெர்ப்னா என்ன.. சொல்லு" என்று மீண்டும் கேட்டார்.. தெரியாதுன்னு தெரிஞ்சும் இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி சார் என்று எனக்குள் கேட்டுக் கொண்ட நான்.. வெளியில் "தெரியலை சார்" என்று மட்டும்தான் பதில் சொல்ல முடிந்தது. அடுத்த விநாடியே குச்சி பறந்து வந்து கரெக்டாக எனது வலது கையில் குத்தி விழுந்தது.. என்னா ஷார்ப்பு!

இந்தப் பக்கம் வந்து நில்லு என்று என்னை மட்டும் தனியாக பிரித்தார்.. அடுத்து பாகப் பிரிவினை வேகம் பிடித்தது. தெரிஞ்சவன் ஒரு பக்கம்.. தெரியாதவன் மறுபக்கம் என ஆளுக்கொரு பக்கமாக வகுப்பை பிரித்து மேய்ந்து விட்டார்.. பின்னர் தெரியாதுன்னு சொன்ன கோஷ்டியை பார்த்து.. இன்னிக்குல இருந்து உங்களுக்கு டியூஷன்.. டெய்லி ஸ்கூல் முடிஞ்சதும் நேரா கிரவுண்டுக்கு வந்துருங்க.. அங்கதான் டியூஷன் என்று உத்தரவிட்டு விட்டு எங்களை போய் உட்காரச் சொன்னார் வாத்தியார்.

The unforgettable teachers and the students of those days

ஆனால் இதுவல்ல மேட்டர்.. அந்த டியூஷன்தான்.. வழக்கமாக வகுப்பில் டியூஷன் நடக்கும்.. இல்லாட்டி வாத்தியார் வீட்டில் நடக்கும்.. ஆனால் இவர் வித்தியாசமாக கிரவுண்டுக்குக் கூப்பிட்டு அங்குள்ள மரத்தடியில் டியூஷனை ஆரம்பித்தார்.. ஒரு வேளை எங்களுக்கெல்லாம் புத்தி தரக் கூடிய போதி மரமாக அதை அவர் நினைத்தாரோ என்னவோ.. அதைப் போய் அவரிடம் கேட்டால் அதுக்கு ஒரு அடி கிடைக்கும்.. எனவே கேட்கலை.

டியூஷன் என்றதும் எல்லோரும் நினைப்பது போல அந்த டியூஷன் நடக்கவில்லை. மாறாக முற்றிலும் வித்தியாசமான டியூஷன் அது.. அந்த இடத்தில் அவர் வாத்தியாராகவே இல்லை.. படு ஜாலியாக காட்சி தந்தார். காலையில் குச்சியை விட்டு எறிந்தாரே அவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு டோட்டலாக மாறிக் காணப்பட்டார். சட்டையைக் கழற்றி விட்டு ஜாலியாக பனியனுடன் அமர்ந்திருந்தார். எளிமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். வாத்தியார் தோரணை இல்லாமல் நம்ம அப்பா உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி பேசி சொல்லிக் கொடுத்தார். "சொல்ற விஷயத்தை சுவாரஸ்யமா சொல்லணும்" அப்படிங்கிறதை அவர் கிட்டதான் நான் கத்துக்கிட்டேன்.

"கிராமர்னா பயப்படக் கூடாது" என்று ஆரம்பித்து கிராமர்னா என்ன.. அதை எப்படி படிக்கணும்.. என்று அழகாக கிளிப் பிள்ளைக்குச் சொல்லித் தருவது போல சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். முதல் நாளே இவனுகளை மயங்க வைத்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கொஞ்சம் போல மட்டும் சொல்லிக் கொடுத்து விட்டு.. டேய் கிளம்புங்க.. இன்னிக்கு சொன்னதை நாளைக்கு கேட்பேன்.. கரெக்டா சொல்லணும்.. போய் வீட்டுல இதைப் படிச்சுப் பாருங்க என்று சொல்லி எங்களைக் கிளப்பி விட்டார்.

அப்பாடா தப்பிச்சோம்டா என்று எழுந்த எங்களில், ஒருத்தன் மட்டும் சார் டியூஷனுக்கு பீஸ் எவ்வளவு சார், சொல்லவே இல்லையே என்று பெரிய பில் கேட்ஸ் போல கேட்க.. அவனை பக்கத்தில் கூப்பிட்ட அவர் தொடையப் பிடித்து நல்ல கிள்ளியபடி (அதுக்குப் பேர் நிமிட்டாம் பழம்னு சொல்வாங்க)
இது ப்ரீ டியூஷன். இதை வச்சு காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமைல நான் இல்லை. உனக்கு அறிவு வளரணும்னு நல்ல எண்ணத்துல சொல்லித் தர்றேன்.. ஒழுங்கா படிச்சுக் கத்துக்கோ.. முடியலைன்னாலும் கத்துக்கோ.. ஏன்னா நீ கத்துக்காம நான் விட மாட்டேன்.. புரியுதா என்று சொல்லி (இதை சொல்லி முடிக்கும் வரை கிள்ளியபடியே இருந்தார்) விட்டார்.. கருகருன்னு கரு வண்டாக இருந்த அவன் தொடை மட்டும் சிவந்து போன அதிசயத்தை அன்றுதான் பார்த்தோம்.

அந்தக் காலத்து ஆசிரியர்களிடம் இருந்த பல நல்ல குணங்கள் இவரிடமும் இருந்தது. நல்லா போட்டு அடிப்பார்.. ஆனால் அதன் நோக்கம்.. அவனை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டுமே என்பதுதான். அடி உதவுவது போல வேற எதுவும் உதவாது என்ற அந்தக் காலத்து நம்பிக்கையின் வெளிப்பாடு அது. எப்படியாவது படிச்சிர மாட்டானா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த அடியெல்லாம். அந்தக் காலத்தில் அடி வாங்காமல் படித்துத் தேறியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லோருமே ஏதாவது ஒரு வாத்தியாரிடம் அடி வாங்கியவர்கள்தான்.

பரமசிவம் வாத்தியாரும் அப்படித்தான். அவருக்கு நிறைய கோபம் வரும். அடிப்பார். ஆனால் எந்த மாணவனையும் வித்தியாசமாக பார்க்க மாட்டார்.. கோபத்தைக் காட்டிய அதே வேகத்தில் தனது குணத்தையும் காட்டுவார். தெரியாதுன்னு சொன்னா முதலில் கோபம் காட்டும் அவர் அடுத்து அவனை தெளிவாக்கும் வரை விட மாட்டார். ஆங்கிலத்தையே தமிழில் சொல்லிக் கொடுத்த வாத்தியார் அவர். மூப்பனார் மாதிரி படு ஜாலியாக ஆங்கிலத்தில் பேசுவார். விஷமாக கசந்த ஆங்கில கிராமரை ரசிக்க வைத்தவர் தனது பேச்சால். அவர் பாடம் நடத்துவதை விட நடத்தும் விதம்தான் செமையாக இருக்கும். அந்த பாணிதான் எங்களுக்குப் பாடத்தைப் புரிய வைத்தது என்று கூட சொல்லலாம்.

மாணவர்கள் அனைவரும் தனது பிள்ளை போலத்தான் அவருக்கு. மத்தியானம் சாப்பிட அவரது வீட்டிலிருந்து கேரியர் வரும்.. பெரிய கேரியர். ஒரு ஆளுக்கானது அல்ல.. 2 பேர் சாப்பிடலாம். பிறகு எதற்காக அத்தனை பெரிய கேரியர் என்றால் தான் சாப்பிடும்போது மாணவர்களுக்கும் எடுத்துக் கொடுப்பார். அதற்காகத்தான் பெரிய கேரியர் சாப்பாடு. சாப்பிடும்போது அவர் டோட்டலாக "அப்பா" மாதிரி மாறி விடுவார். "இன்னிக்கு வறுத்த கறி போலடா.. இந்தா சாப்பிடு.." என்று பக்கத்தில் இருப்பவர்களின் தட்டில் போட்டு விடுவார். அவர்கள் அதை ஒழுங்கா சாப்பிடுகிறார்களா என்றும் பார்ப்பார்.. இல்லாட்டி தலையில் குட்டு விழும்.. ஒரு கறியைத் திங்க தெரியலை.. நீயெல்லாம் என்னத்தப் பண்ணப் போறேன்னு போனஸ் திட்டும் சேர்ந்து வரும்!

நம்ப மாட்டீங்க.. கூமுட்டைகளின் கூடாரமாக திகழ்ந்த அந்த 10ம் வகுப்பு ஏ மாணவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் அரைப் பரீட்சைக்குள் 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கும் அளவுக்கு தேறியிருந்தனர். முழுப் பரீட்சையில் ஆங்கிலத்தில் யாருமே பெயிலாகவில்லை. ஒட்டுமொத்தமாகவே அந்த வகுப்பு மாணவர்கள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பரீட்சையில் கலக்கியிருந்தனர். அந்த காலகட்டத்திதல் ஒரு மாநகராட்சிப் பள்ளியில் இப்படியெல்லாம் மாணவர்கள் படித்துத் தேறுவது எல்லாம் ஆச்சரியமான விஷயம்.

இன்று அந்தப் பள்ளிக் கூடம் மிகப் பெரிய அந்தஸ்துடன் தனி மிடுக்குடன் தனது கல்விச் சேவையை தொடர்ந்து கொண்டுள்ளது. எச்.சி.எல் அதிபர் ஷிவ் நாடார் கூட இந்த பள்ளிக் கூடத்தில் படித்தவர்தான். பரமசிவம் வாத்தியார் இப்போது இல்லை.. ஆனால் அந்தப் பள்ளிக் கூடமும் சரி, அவரிடம் படித்தவர்களும் சரி.. அவரை மறக்கவே முடியாது.

English summary
Today is Teachers' day. We cannot forget our teachers who taught the life and shaped up us well. Here is a story on one such Teacher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X