தென்மாவட்ட சுற்றுப் பயணம்- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.
முப்படை தளபதிகளின் குழு தலைவராக (CSC) ராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்பு!
தென் மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13-ந் தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாள் விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர் அங்கிருந்து எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் பிறந்த இல்லத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில்..
இதன்பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடினார்.

மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று மதுரை வந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஆளுநர் தமது குடும்பத்தாருடன் சென்று சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனம்
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் மூலவர், மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரர் முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவில் அலுவலகத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநர் வருகையை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இன்று முற்பகல் 11 மணி அளவில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.