மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரிட்டாபட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது?- 2200 ஆண்டு வரலாற்றை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

மதுரை: வரலாற்றில் மிகப் பழைமையான நகரம் மதுரை. 'தேமதுரத் தமிழோசை' என்பான் பாரதி. அந்தத் தமிழின் மதுரத்தை தனது பெயரிலேயே தாங்கி நிற்கும் சங்ககால நகரம்.

மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் எனத் தமிழ் இலக்கியம் இந்த ஊரை விதம்விதமாக பெயர் சொல்லி அழைக்கிறது. இந்த ஊரில் காணப்படும் மலைகள் ஏறக்குறைய 2500 ஆண்டுகளாகத் தமிழர்களின் பண்பாட்டுத் தடங்களைத் தாங்கி நிற்கின்றன.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் பகுதியை உயிர்ப்பன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத்தலம் என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

'எந்த ஊருக்கும் இல்லாத பெருமை, அரிட்டாபட்டிக்கு மட்டும் ஏன்?' என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ''மதுரையில்தான் முதல்முதலாக சமணம் கால்பதித்தது. அவர்கள் வடக்கிலிருந்து வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு உகந்த இயற்கையான நிலமாக மதுரையே இருந்தது. 2000 ஆண்டுகால சமண வரலாறு மதுரையைச் சுற்றியே உள்ளது. வேறு எங்கும் இல்லை" என்கிறார் தொல்லியல் ஆய்வாளராக இருந்து பணி ஓய்வு பெற்றுள்ள சொ.சாந்தலிங்கம்.

பணத்தை வாரிக்கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! - அமெரிக்காவில் விவாதிக்கப்படும் கீழடி ஆய்வுகள்! பணத்தை வாரிக்கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! - அமெரிக்காவில் விவாதிக்கப்படும் கீழடி ஆய்வுகள்!

 ஆத்தாடி! வியக்கவைக்கும் அரிட்டாபட்டி

ஆத்தாடி! வியக்கவைக்கும் அரிட்டாபட்டி

அரிட்டாபட்டியில் காலத்தால் முதுமையான ஏழு குன்றுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த மலைகளையொட்டி நீராதாரம் கொண்ட 72 ஏரிகள் உள்ளன. அதையொட்டி 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் உள்ளன. இதை எல்லாம் உள்ளடக்கிய 'ஆனைகொண்டான் ஏரி', 16 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

எவ்வளவு கோடை வெயில் மதுரையைச் சுட்டு எரித்தாலும் இங்குள்ள ஏரிகளில் நீர் வற்றாது என்பது கூடுதல் சிறப்பு. இப்படி இயற்கைச் சூழல் வளம் கொழிப்பதால் 250 வகையான பறவை இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.

இந்தப் பறவைகள் பட்டியலில் மிக முக்கியமாக லகர் ராசாளி, ஷாஹீன் ராசாளி, ராசாளிப் பருந்து என 3 வகையான கொன்றுண்ணி இனங்கள் அடங்கும். மேலும் எறும்புத்திண்ணி (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus), அரியவகை தேவாங்கு (Loris spp) என வனவிலங்குகளுக்கு உகந்த உயிரோட்டம் உள்ள நிலமாக அரிட்டாபட்டி உள்ளது.

ஆகவேதான், இதனை 'உயிர்ப்பன்மைப் பகுதி' என அரசு குறிப்பிடுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாகும். கடலோர மற்றும் உள்ளூரில் அமைந்துள்ள நீர்நிலைகள், பல்லுயிர்த்தன்மைமிக்க தாவரங்கள், அதைப்போலவே சிற்றின விலங்கினங்களின் வாழ்விடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துக்காக இது அமைக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அரிட்டாபட்டியில் உள்ள அழகான தாமரை தடாகம், காவிய காலத்தினை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் ஓர் அற்புதமான களம். அதை நேரில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்' என்கிறார் உள்ளூர் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன்.

''இங்கு அரிதான உயிரினங்களைத் தாண்டி, சமண மதத்தின் தாய் பூமியாகவும் அரிட்டாபட்டி உள்ளது'' என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும் 'மதுரையில் சமணம்' என்ற ஆய்வு நூலின் ஆசிரியருமான சொ.சாந்தலிங்கம். இந்த ஊரில் விதம்விதமான சமண சிற்பங்கள் உள்ளன. மேலும், அரிதான சமண படுக்கைகள் உள்ளன. தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இன்றும் பாதுகாப்பாக உள்ளன.

இவற்றைத் தவிர 2200 ஆண்டுகள் பழைமையான குடைவரைக் கோயில்களும் உள்ளன. இப்படி வரலாற்றுக் களஞ்சியமாக இப்பகுதி திகழ்வதால் பெருமைகளின் பட்டியலுக்குக் குறைவில்லாமல் உள்ளது. அதை உணர்ந்ததால்தான் தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டது. இதனைக் கண்டு அரிட்டாபட்டி மக்கள் இனிப்புக்களை வழங்கிக் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

இவர்களைப் போலவே மகிழ்ச்சியில் மூழ்கிப்போய் இருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன். அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று டுவிட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 எங்கும் பார்க்க முடியாத சிறப்புகள்

எங்கும் பார்க்க முடியாத சிறப்புகள்

வரலாற்றில் பல அதிசயங்களைக் கொண்டுள்ள அரிட்டாபட்டியைப் பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள ஆய்வாளர் சொ. சாந்தலிங்கத்திடம் பேசினோம்.

''மதுரை மக்களின் இருபது வருடகால கனவு இது. அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். இந்தப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் சமூக விரோதிகளிடம் இருந்து இனிமேல் காப்பாற்றப்படும். ஆகவே, இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாகும்.

ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழைமையான ஒரு சமண தளமாக அரிட்டாபட்டி உள்ளது. இங்கு 2200 ஆண்டுகள் பழைமையான 2 தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஊரில் உள்ள மலைக் குகைகளில் சமணத் துறவிகள் வாழ்ந்துள்ளனர். அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன.

அவர்கள் அமைத்த 'சமணப் படுகைகள்' இப்போதும் உள்ளன. அது ஒரு பள்ளிக்கூடமாக அன்றைக்குச் செயல்பட்டுள்ளது. இங்குள்ள பிராமி கல்வெட்டின் மூலம் 'நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்' என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கியதாக அறிகிறோம்.

அதற்கடுத்து 7 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் ஒரு குடவரை சிவன் கோயிலை அமைத்துள்ளனர். இது மலையைக் குடைந்து உருவாக்கிய கோயில். அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவன், விநாயகர் ஆகிய இருவருடன் லகுலீசர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. லகுலீச பாசுபதத்தில் ஒரு பிரிவு இது. 'பசு' என்றால் உயிர். 'உயிர்களுக்குத் தலைவன்' என்று பொருள். இதுபற்றிய குறிப்பு சிந்துசமவெளி நாகரிகத்தில்கூட கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உள்ள பேரூரில் லகுலீசர் சிலை ஒன்று உள்ளது. அதைவிட்டால் புதுக்கோட்டை மதகடிப்பட்டு, தேவர் மலை உள்ளது. அதைவிட்டால் வேறு எங்கும் இல்லை. அதிலும், மிகச்சிறப்பான சிற்பம் உள்ளது அரிட்டாபட்டியில்தான்.

அரிட்டாபட்டியில் 7 ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தின் கீழாக உள்ள வட்டெழுத்து கல்வெட்டில் 'திருப்பிணையன் மலை' எனப் பொரிக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் 'கலிஞ்சன் மலை' என்கிறார்கள். அக்கல்வெட்டில், 'பாதிரிக்குடியார் செய்வித்த திருமேனி' என்று எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் 'பாதிரிக்குடி' என்பது அரிட்டாபட்டியின் பழைய பெயர்.

அதிகாரிகளின் ஏற்பாட்டில் அச்சணந்தி என்ற ஒரு சமணத்துறவி மகாவீரருக்கு அந்தச் சிற்பத்தைச் செய்துள்ளார். 'இதை உடையாமல் நாங்கள் பாதுகாப்போம்' என்று அந்த ஊர்மக்கள் உறுதிமொழி அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

2000 ஆண்டு செல்வத்தைக் காப்பாற்றிய ஸ்டாலின்

2000 ஆண்டு செல்வத்தைக் காப்பாற்றிய ஸ்டாலின்

13 ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இப்போது அழிந்துவிட்டது. அதன் அடித்தளம் மட்டுமே எஞ்சி உள்ளது. இங்குள்ள கல்வெட்டில் 'விக்கிரம பாண்டியன் பெருந்தெரு' என உள்ளது. அந்தக்காலத்தில் இது 'marketplace' ஆக இருந்துள்ளது எனத் தெரியவருகிறது.

இந்த ஊருக்கு திருமலைநாயக்கர் ஒரு செப்பேடு கொடுத்துள்ளார். நல்லது, கெட்டது நடக்கக்கூடிய நாள்களில் ஊரிலுள்ள மக்களிடம் உதவி பெற்று வாழ்ந்து கொள்வதற்காக ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட செப்பேடு அது. இது 18 ஆம் நூற்றாண்டில் நடந்தது. அந்தவகையில், அரிட்டாபட்டிக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது" என்கிறார் சாந்தலிங்கம்.

மதுரை

மதுரை


இவர் மதுரையில் 1990 முதல் 2007 வரை தொல்லியல்துறை ஆய்வாளராக பணியாற்றியவர். இந்த ஊரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இவர் ஆய்வு செய்துள்ளார். அப்போதே இதை வரலாற்றுச் சின்னமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

இவரைப்போல பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் முழுமையான வெற்றி கிடைத்துள்ளது. கிரானைட் முதலாளிகள் கபளீகரம் செய்ய இருந்த வரலாற்றுச் செல்வத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார் ஸ்டாலின்.

English summary
What is happening in Arittapatti? 2200 years of history saved by CM Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X