ஜூலை 1.. தேதி குறிச்சாச்சி.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்!
மும்பை: மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தேவேந்திர பட்னாவிஸ் ஜூலை 1ல் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் தான் சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் கூட்டணி ஆட்சிக்கு அவர்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா! நம்பிக்கை வாக்கெடுப்பு முன்பே பதவி துறப்பதாக அறிவிப்பு

உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதையடுத்து வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை சிவசேனா நாடியது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதற்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக தீவிர ஆலோசனை
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சு
இதன் ஒருபகுதியாக தற்போது கோவாவில் உள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அம்மாநில பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த் இரவில் சந்தித்து பேசினார். மேலும் தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் போனில் பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கும்போது ஆதரவு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு எவ்வளவு?
சிவசேனா எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம் மகாராஷ்டிரவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் பலம் முழுமையாக பாஜகவுக்கு கிடைக்கும். அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளன. இதுதவிர 40 பேரின் ஆதரவு மட்டுமே தேவை. தற்போது சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேரும், சிவசேனா கூட்டணிக்கு ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த சில சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவின் பக்கம் சாயும் பட்சத்தில் பாஜக ஆட்சி அமைப்பது நூற்றுக்குநூறு சதவீதம் உறுதியாகும்.

ஜூலை 1ல் முதல்வராகும் பட்னாவிஸ்
இதனால் பாஜக உற்சாகத்தில் உள்ளது. மேலும் ஜூலை 1ல் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உடனடியாக மும்பை புறப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அக்கட்சி தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அதன்பிறகு மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.