சீக்ரெட் மீட்டிங்! குஜராத் பறந்த ஷிண்டே! பின்னால் சென்ற ஃபட்னாவிஸ்! நள்ளிரவில் "அவர்" உடன் சந்திப்பு
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் தொடரும் நிலையில், இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகிறது. இந்த சிக்கல் தொடங்கிய போது யாரும் இவ்வளவு காலம் நீட்டிக்கும் என எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும், கடந்த வாரம் தொடங்கிய பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. இது சிவசேனாவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்த மகாராஷ்டிரா ஆளுநர்.. பணிக்கு திரும்பியதால் அரசியல் களம் விறுவிறுப்பு

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தில் அடுத்து என்ன தான் நடக்கும் என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது. முதலில் அதிருப்தி எம்எல்ஏ ஷிண்டேவுக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் பல எம்எல்ஏக்களும் ஷிண்டே பக்கம் திரும்பியதால் தாக்கரே அரசு மைரானிட்டி அரசானது. சுமார் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரகசிய சந்திப்பு
இதுவரை இந்த விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை. அது சிவசேனாவின் உட்கட்சி பிரச்சினை என்றும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றுமே பாஜக தொடர்ச்சியாகக் கூறி வந்தது. இதனிடையே திடீர் திருப்பமாக நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஏக்னாத் ஷிண்டே சந்தித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியல் குறித்து இரு தரப்பும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு விமானம்
இதற்காக நேற்று இரவு ஏக்நாத் ஷிண்டே அசாமின் கவுகாத்தியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குஜராத்தின் வதோதரா சென்றுள்ளார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு இருந்த நிலையில், இந்த சீக்கரெட் மீட்டிங் நடந்துள்ளது. இந்த மீட்டிங்கில் மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் கலந்து கொண்டார். இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் வதோதரா சென்றடைந்தார்.

தகுதி நீக்கம்
இதற்கிடையே மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தை நன்கு அறிந்த ஒருவர் கூறுகையில், "இப்போதைய சூழலில் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் பெரும்பான்மை இழக்கும் சூழல் உருவாகும். இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள நிலையில், அவர்களைத் துணைச் சபாநாயகர் அழைத்துள்ளார். அப்படி அனைவரும் ஒரே இடத்திற்கு வரும் போது இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும்.

அச்சம்
முன்னதாக சிவசேனாவுக்கு எதிராக சகன் புஜ்பால் இதேபோல அதிருப்தி தெரிவித்த போது, அவருக்கு ஆதரவாக 18 எம்ஏல்ஏக்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், கடைசியில் 11 பேர் மட்டுமே சென்றனர். கடந்த காலங்களில் சிவசேனாவை விட்டுச் சென்றவர்களுக்குப் பெரியளவில் அரசியல் எதிர்காலம் அமையவில்லை என்பதால் ஷிண்டேவுக்கு சற்று அச்சம் உள்ளது.

போராட்டம்
அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளியே சென்று ஐந்து நாட்களாகிவிட்டன. எனவே, எம்எல்ஏக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. மேலும், அவர்களின் தொகுதிகளில் சிவசேனா தொண்டர்கள் போராட்டத்திலும் குதித்து உள்ளனர். இதனால் அவர்களிடையே அமைதியின்மை அதிகரித்து வருகிறது. ஆட்சி அமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், நிலைமை கையை மீறிப் போய்விடும்.

ஷிண்டே
இதுபோன்ற சூழலில் மாற்று அரசுகள் விரைவாக அமைக்கப்பட வேண்டும்.. ஆனால் இங்கு அதிக காலம் ஆகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் செல்லும் என ஷிண்டே தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அமித் ஷா போன்ற மூத்த தலைவர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என ஷிண்டே கேட்டுக் கொண்டார். அதற்காகத் தான் வதோதராவில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.