மரண பயம் காட்டிய கொரோனா... தடுப்பூசியால் தப்பிய 49.52 கோடி மக்கள் - மெல்ல மீளும் உலகம்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 52,55,29,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 49,52,64,860 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,96,898 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 38,470 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது XE என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது.
கொரோனா காலத்தால்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ 1500 கோடி வருவாய்.. ரயில்வே துறை

சீனாவில் மீண்டும் லாக்டவுன்
சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இங்கு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, மருத்துவ உதவி, அடிப்படை வசதிகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 7,85,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,55,29,510 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 7,60,649 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49,52,64,860 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,743 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களளின் மொத்த எண்ணிக்கை 62,96,898 பேராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல குறைந்து வருகிறது. 1,572 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,31,135 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 86,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,47,99,270 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,28,336 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் அதிகரிப்பு
பிரான்ஸ் நாட்டில் 27,842 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 56,446 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 28,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 30,310 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

4 வது கொரோனா அலை உருவாகும்
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.