பாஜகவில் இணைந்தால் தாவூத் இப்ராஹிம் புனிதராவார்! RSS சுதந்திரத்துக்கு போராடியதா?-உத்தவ் தாக்கரே
மும்பை: பாஜகவில் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருக்கிறார்.
சிவசேனா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது தேசிய அளவில் நிலவும் பணவீக்கம் குறித்தும் மத்திய பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக அரசியலுக்கு என்ன செய்திருக்கும்? உத்தவ் தாக்ரே சரமாரி கேள்வி

உத்தவ் தாக்கரே பேச்சு
"நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது எனக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று பாஜகவினர் தெரிவித்தனர். ஆனால், இன்றோ இந்த அரசு எப்படி செயல்படுகிறது என்று கேட்கிறார்கள். மகாராஷ்டிராவில் எங்கள் அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அது கவிழ்வதற்கான தேதியை குறித்துக்கொண்டே இருந்தார்கள்.

தாவூத் இப்ராஹிம்
மத்திய அரசின் நிறுவனங்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றன. ஒருவேளை தாவூத் இப்ராஹிம் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே இரவில் அவர் புனிதராக மாறிவிடுவார் என உறுதியாக சொல்வேன். அவரை அமைச்சராகக் கூட ஆக்கிவிடுவார்கள். இங்கு யாரும் நாட்டில் நிலவி வரும் பண வீக்கத்தை பற்றி பேச மறுக்கிறார்கள்.

இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி ரேஷன் பொருட்களை கொடுத்தார். அதை சமைக்காமல் அப்படியேவா சாப்பிட முடியும்? சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தால் எப்படி சாமானியரால் சமைத்து உண்ண முடியும்? இலங்கையில் நடப்பதை நன்றாக பாருங்கள். நாம் அவர்களிடம் இருந்து பாடம் பயில வேண்டும். இப்போது எரிபொருள் விற்கும் விலையை பாருங்கள்.

போலி இந்துத்துவா
ஒருமுறை பெட்ரோல் விலை வெறும் 7 பைசா உயர்த்தப்பட்ட காரணத்துக்காக வாஜ்பாய் நாடாளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்றார். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக இப்போது இல்லை. பாஜகவை விட சிவசேனாவின் இந்துத்துவா சிறந்தது. போலியான இந்துத்துவவாதிகள் சிலர் நாட்டை தவறாக வழி நடத்துகின்றனர். கோயில்களில் மணி அடிக்கும் இந்துக்கள் எங்களுக்கு தேவையில்லை என பாலாசாஹேப் தாக்கரே சொல்லிக்கொடுத்துள்ளார்.

பாபர் மசூதி
தற்போது பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிடக்கூடிய இந்துக்களே தேவை. இந்துத்துவாவுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற சொல்லுங்கள்? நீங்கள் பாபர் மசூதியை கூட இடிக்கவில்லை. சிவசேனா கட்சி தொண்டர்களே பாபர் மசூதியை இடித்தார்கள். சிவசேனா தொண்டர்களுக்கு இந்துத்துவ ரத்தம் ஓடுகிறது. எங்களுடன் போட்டிபோட நினைக்காதீர்கள். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துவிட்டால் எங்களின் இந்துத்துவ கொள்கை குறைந்துவிடுமா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இந்துத்துவ கட்சிகளா? பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஒலிபெருக்கி விவகாரத்தில் என்ன கூறினார். பால் தாக்கரேவின் கொள்கையில் உறுதியாக நாங்கள் இருக்கிறோம். உங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், எனது தாத்தா சம்யுக்த மகாராஷ்டிரா கோரிக்கையை எழுப்பியவர்." என்றார்.