மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு! கலகக் குரல் ஷிண்டேவுக்கு து.மு. பதவி!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான புதிய கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணிக்கு எதிராக 48 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
தந்தையை மறவாத தனயன்! பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே! முதல்வராக எடுத்த கடைசி முடிவு

கை விரித்த உச்சநீதிமன்றம்
இதையடுத்து மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். ஆனால் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு நிலுவையில் உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் உத்தவ் தாக்கரே. உச்சநீதிமன்றமோ, நம்பிக்கை வாக்க்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது.

உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதனால் நேற்று இரவு முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்னதாக அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார். இதனையடுத்து நள்ளிரவில் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதே கையோடு நள்ளிரவில் கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினார் உத்தவ் தாக்கரே.

நாளை பதவியேற்பு
உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடியது பாஜக. மேலும் புதிய ஆட்சி அமைக்க இன்று ஆளுநரை சந்தித்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க கூடும் என தெரிகிறது.

ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி
மேலும் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்த அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது. கோவாவில் முகாமிட்டுள்ள அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏக்கள் இன்று அல்லது நாளை மும்பை திரும்ப உள்ளனர். அதேநேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் உள்ள சிலர் உத்தவ் தாக்கரே பக்கம் செல்லக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விறுவிறு ஆலோசனை
இதனிடையே இன்று காலை 10 மணிக்கு கோவா தாஜ் ஹோட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மும்பையில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அத்துடன் இன்று நடைபெற இருந்த சிறப்பு சட்டசபை கூட்டம், உத்தவ் தாக்கரே ராஜினாமாவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.