"அவர் அமைச்சர்.. அவர் மகன் எம்பி! ஆனால் நான் வாரிசு அரசியல் செய்கிறேனாம்!" ஆவேசமான உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிரா அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிருப்தி அமைச்சர் ஷிண்டே குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் இப்போது அசாம் மாநிலத்தில் இருக்கும் ஹோட்டலில் உள்ளார்.
அங்கிருந்து கொண்டே ஷிண்டே ஆளுநருக்குக் கடிதம் எழுதுவது, செய்தியாளர்களிடம் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தவ் தாக்கரே பதவி விலகுவதை தவிர வேற வாய்ப்பே இல்லை ராஜா.. ஏக்நாத் ஷிண்டே கையில் 49 எம்.எல்.ஏக்கள்!

அதிருப்தி
முதலில் 16 எம்எல்ஏக்கள் மட்டுமே ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்போது ஷிண்டே தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி உள்ளார். உண்மையில் 40 எம்எல்ஏக்கள் இருந்தால் அவரால் கட்சி தவால் தடை சட்டத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.

ஆட்சி அவ்வளவு தான்
சில நாட்களுக்கு முன்பு வரை பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை உடன் இருந்த உத்தவ் தாக்கரே அரசு, இப்போது சொந்த கட்சி எம்எல்ஏக்களால் மைனாரிட்டி அரசாக மாறிப் போயுள்ளது. இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை என்சிபி மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக இந்த விவகாரத்தில் கருத்து கூறவில்லை.

தாக்கரே ஷாக்
ஒட்டுமொத்த கட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்த தாக்கரேவுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அது வெளிப்படையாகவே தெரிந்தது. தான் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட தாக்கரே, அதிருப்தியாளர்களே வந்து அந்தக் கடித்ததை ஆளுநரிடம் கொடுத்துவிடலாம் என்றார். அத்துடன் நிற்காமல் முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் இருந்தும் அவர் காலி செய்தார்.

ஆலோசனை
இந்தச் சூழலில் உத்தவ் தாக்கரே இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் கட்சியை உடைக்க முயல்வதாகச் சாடினார். மேலும், கட்சியை விட்டுச் சென்றவர்களைப் பார்த்துத் தான் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசி உள்ளார்.

ஓடிவிட்டார்கள்
சிவசேனாவை விட்டு வெளியேறுவதை விடச் சாவதே மேல் என்று சொன்னவர்கள் இன்று கட்சியில் இருந்து ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனா மற்றும் தாக்கரேவின் பெயர்களைப் பயன்படுத்தாமல் எவ்வளவு தூரம் தான் செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

ஆதித்யா தாக்கரே
உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே சிவசேனாவின் மாவட்டத் தலைவர்களை இன்று சந்தித்தனர். ஆதித்யா தாக்கரேவுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னை ஓரங்கட்டுவதாக ஷிண்டே கூறி இருந்தார். இந்தச் சூழலில் கட்சியின் இதர நிர்வாகிகள் உடன் இணக்கமான உறவைப் பேணும் வகையில் ஆதித்யா தாக்கரே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார்.

வாரிசு அரசியல்
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தனது மகனையே எம்.பி. ஆக்கி உள்ளார். ஆனால், அவருக்கு எனது மகன் உடன் பிரச்சினை இருக்கிறது. கேட்டால் நான் வாரிசு அரசியல் செய்வதாகக் கூறுகிறார்" என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆதித்யா தாக்கரே கட்சியில் அதிகாரப்பூர்வமற்ற அதிகார மையமாகச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார்.

உடல்நிலை
அந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மேலும் பேசுகையில், "என் உடல் பயங்கரமாக வலிக்கிறது.. என் தலை, கழுத்து முதல் கால்கள் வரை புயங்கராக வலிக்கிறது. சிலர் நான் குணமடைய மாட்டேன் என்றெல்லாம் கூட நினைத்தார்கள். என்னால் கண்களைக் கூட திறக்க முடியவில்லை. ஆனால் எனக்கு என்னை பற்றி எல்லாம் ஒருபோதும் கவலை இல்லை" என்றும் உருக்கமாகப் பேசினார்.