மகாராஷ்டிரா.. ஏக்நாத் ஷிண்டே விரைவில் மும்பை ரிட்டர்ன்.. பாஜக ஆட்சியை உருவாக்க பிளான்?
மும்பை: சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் விரைவில் மும்பை வந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு 56 எம்எல்ஏ-க்களும், தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏ-க்களும், காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏ-க்களும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 20ம் தேதி சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சிவசேனா கட்சியில் இருந்து சுமார் 40 எம்எல்ஏ -க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சென்றுள்ள நிலையில், சுயேட்சைகள் உட்பட 50 எம்எல்ஏ ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அசாம் மாநில கவுகாத்தியுல் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 சிவசேனா எம்எல்ஏ-க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸிற்கு, ஜூன் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் முடிவில், தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12ம் தேதி வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. அத்துடன், அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, இங்கே உள்ள அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரில் இந்துத்துவாவை முன்னெடுக்க கவுகாத்தி வந்துள்ளோம். கிட்டத்தட்ட 50 பேர் என்னுடன் இருக்கிறார்கள். விரைவில் மும்பை சென்று, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். அதனால் எம்எல்ஏ-க்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு விடுதியில் தங்க வைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் விரைவில் ஆளுநர் கோஷியாரியை சந்தித்து சட்டமன்றத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாஜக முக்கியத் தலைவர்களுடன் ஏக்நாத் ஷுண்டே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் அடுத்த மாத முதல் வாரத்தில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க பாஜக தீவிரம்- டெல்லி சென்றார் பட்னாவிஸ்! காங். எம்.எல்.ஏக்களும் வலைவீச்சு!