அதிர்ச்சியா... எனக்கா.. மாநிலங்களவை தேர்தல் முடிவில் ட்விஸ்ட் வைத்த ஷரத் பவார்...!
மும்பை: மகாராஷ்டிரா மாநில மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 தமிழரை விடுதலை செய்யும் வரை லாங் லீவில் வெளியே விடுங்க.. சீமான் அப்பீல்
தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது

வாக்குப்பதிவில் குழப்பம்
காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அதில், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏராளமான எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. முக்கியமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவும், எதிர்க்கட்சியான பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் தேர்தலை ரத்து செய்யக்கோரின. இதனால் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி முடிவு
இறுதியாக 8 மணி நேரம் தாமதமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜகவைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களான தனஞ்சே மகாதிக், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் முன்னாள் அமைச்சர் அனில் போண்டே ஆகியோர் வெற்றிபெற்றனர். அதேபோல் சிவசேனா கட்சியில் இருந்து சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபூல் படேல் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் வெற்றிபெற்றனர்.

தேர்வு முடிவு பற்றி ஷரத் பவார்
இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், இந்தத் தேர்தல் முடிவுகள் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. எங்கள் கூட்டணியின் மூன்று வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கு என்ன வாக்குகள் வர வேண்டி இருந்ததோ அது வந்து சேர்ந்தது. ஆனால் எங்கள் கட்சியில் வெற்றிபெற்ற பிரபூல் படேலுக்கு ஒரு வாக்கு கூடுதலாக வந்தது. அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியும். அவர் ஏற்கனவே என்னுடன் பணியாற்றியவர் என்று கூறி ட்விஸ்ட் வைத்து சென்றார்.

பாஜக வெற்றிக்கு காரணம் என்ன?
மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்கு, அம்மாநில சுயேட்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவே காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் அதிகளவிலான சுயேட்சைகளை ஈர்த்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது மாநிலங்களவை உறுப்பினரை வெற்றிபெற வைத்தது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.